ஐபிஎல் தொடரில் இன்று பிற்பகல் 3.30 மணிக்கு பெங்களூருவில் உள்ள எம்.சின்னசாமி மைதானத்தில் நடைபெறும் ஆட்டத்தில் ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு (ஆர்சிபி) – டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் மோதுகின்றன.
நடப்பு சாம்பியனான ரஜத் பட்டிதார் தலைமையிலான ஆர்சிபி மிகவும் வலிமையான அணியாக உருவெடுத்துள்ளது. 5 ஆட்டங்களில் விளையாடி உள்ள அந்த அணி 4 வெற்றி, ஒரு தோல்வியுடன் 8 புள்ளிகளை குவித்து பட்டியலில் 2-வது இடத்தில் உள்ளது. பேட்டிங்கில் விராட் கோலி, பில் சால்ட், தேவ்தத் படிக்கல், ரஜத் பட்டிதார், டிம் டேவிட் ஆகியோர் அபாரமான பார்மில் உள்ளனர்.
இவர்களில் ஒருவர் சிறப்பாக விளையாடத் தவறினால் அதை மற்றொருவர் தனது அதிரடியால் நிவர்த்தி செய்பவராக உள்ளார். இது அணியின் மிகப்பெரிய பலமாக உள்ளது. பேட்டிங் வரிசையில் டாப் 5-ல் அங்கம் வகிக்கும் இவர்களது அதிரடியான மட்டை வீச்சு பெங்களூரு அணியின் வெற்றிகளுக்கு வலுவான அடித்தளத்தை அமைத்துக் கொடுத்துள்ளது.
இந்த ஐவர் கூட்டணியிடம் இருந்து மேலும் சிறந்த ஆட்டம் வெளிப்படக்கூடும். இவர்களில் ரஜத் படிதார் தனது அபாரமான சிக்ஸர் வேட்டையின் மூலம் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளார். இதுவரை விளையாடிய 5 போட்டிகளில் 21 சிக்ஸர்களை விளாசி, இந்த சீசனில் அதிக சிக்ஸர்கள் அடித்தவர்கள் பட்டியலில் அவர் முதலிடத்தில் உள்ளார். இன்றைய ஆட்டத்தில் டெல்லி அணியின் பந்துவீச்சாளர்களுக்கு ரஜத் பட்டிதார் நெருக்கடி கொடுக்கக்கூடும்.
அக்சர் படேல் தலைமையிலான டெல்லி கேப்பிடல்ஸ் அணி 4 ஆட்டங்களில் விளையாடி 2 வெற்றி, 2 தோல்விகளுடன் 4 புள்ளிகளை பெற்றுள்ளது. முதல் 2 ஆட்டங்களில் வெற்றி பெற்ற அந்த அணி அடுத்தடுத்த 2 ஆட்டங்களில் தோல்விகளை சந்தித்துள்ளது. பேட்டிங்கில் அனுபவம் வாய்ந்த கே.எல்.ராகுல், பதும் நிஷங்கா, டிரிஸ்டன் ஸ்டப்ஸ், டேவிட் மில்லர், நித்திஷ் ராணா ஆகியார் இருந்தாலும் இவர்களிடம் இருந்து தொடர்ச்சியான செயல் திறன் வெளிப்படவில்லை.
முதல் 2 ஆட்டங்களிலும் தனது அதிரடியால் வெற்றி தேடிக்கொடுத்த சமீர் ரிஷ்வியிடம் இருந்து கடைசி 2 ஆட்டங்களிலும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய அளவிலான மட்டைவீச்சு வெளிப்படவில்லை. ஆல்ரவுண்டராக கேப்டன் அக்சர் படேலிடம் இருந்து எதிர்பார்த்த அளவிலான செயல் திறன் வெளிப்படவில்லை. பேட்டிங்கில் அவர், வெறும் 3 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார்.
அதேவேளையில் பந்துவீச்சில் 3 விக்கெட்களே கைப்பற்றி உள்ளார். பிரதான சுழற்பந்து வீச்சாளரான குல்தீப் யாதவும் பார்மில் இல்லை. 3 விக்கெட்கள் மட்டுமே கைப்பற்றியுள்ள அவர், ஓவருக்கு சராசரியாக 10 ரன்களை விட்டுக்கொடுத்துள்ளார். வேகப்பந்து வீச்சாளர்களான முகேஷ் குமார், நடராஜன் ஆகியோர் ஒரு சில ஆட்டங்களில் சிறப்பாக செயல்பட்டு இருந்தனர்.
இந்த பந்துவீச்சு கூட்டணி ஆர்சிபி அணியின் அதிரடி பட்டாளங்களை கட்டுப்படுத்துவது மிகவும் கடினமானதாக அமையக்கூடும். ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் ஜோஷ் ஹேசில்வுட்டை உள்ளடக்கிய ஆர்சிபி அணியின் பந்துவீச்சு துறை மிகவும் திறமையான ஒன்றாகத் திகழ்கிறது.
சின்னசாமி மைதானத்தில் எப்படிப் பந்துவீசினால் விக்கெட்டுகளை வீழ்த்த முடியும் என்பதற்கான துல்லியமான ‘லைன் மற்றும் லெந்த்’ முறையை அவர்கள் கண்டறிந்துள்ளனர். டெல்லி அணியின் பேட்டர்கள் தங்களின் கிரிக்கெட் நுணுக்கங்களையும் சாதுர்யத்தையும் முறையாகப் பயன்படுத்தத் தவறினால், சின்னசாமி மைதானத்தில் இதற்கு முன் நடந்த மூன்று போட்டிகளைப் போலவே, இந்தப் போட்டியும் பெங்களூருவுக்குச் சாதகமான ஒருதலைப்பட்சமான ஆட்டமாகவே அமையக்கூடும்.














