உத்தர பிரதேசம், நொய்டாவைச் சேர்ந்த விவசாயி விமான நிலையத்துக்கு நிலம் வழங்கி ரூ.15 கோடியை பெற்றார். இதன் மூலம் அவர் சொந்தமாக ஹெலிகாப்டரை வாங்கி உள்ளார்.
உத்தர பிரதேசம் மாநிலம் நொய்டாவின் ஜேவார் பகுதியில் புதிதாக கட்டப்பட்டு உள்ள சர்வதேச விமான நிலையத்தை பிரதமர் நரேந்திர மோடி சமீபத்தில் தொடங்கி வைத்தார். சுமார் 11,750 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த விமான நிலையம் ஆசியாவிலேயே மிகப்பெரிய விமான நிலையம் ஆகும். புதிய விமான நிலையத்துக்காக நொய்டாவின் ஜேவார் பகுதியைச் சேர்ந்த விவசாயிகளிடம் இருந்து நிலம் கையகப்படுத்தப்பட்டது.
இதற்காக ஒரு ஏக்கருக்கு ரூ.10 கோடி முதல் ரூ.20 கோடி வரை வழங்கப்பட்டது. இதன் காரணமாக நொய்டாவைச் சேர்ந்த விவசாயிகள் திடீர் பணக்காரர்களாக மாறி உள்ளனர்.
பன்வாரி பாஸ் கிராமத்தைச் சேர்ந்த சிவம் பிரஜாபதி (26) இது குறித்து கூறும்போது, “தனியார் சூரிய மின் உற்பத்தி ஆலையில் தொழிலாளியாக பணியாற்றி வருகிறேன். நொய்டா சர்வதேச விமான நிலையத்துக்காக எனது விவசாய நிலத்தை விற்பனை செய்தேன். இதில் எனக்கு ரூ.15 கோடி கிடைத்தது. சொந்தமாக ஹெலிகாப்டர் வாங்க வேண்டும் என்பது எனது நீண்ட நாள் ஆசை.
நிலம் விற்ற பணத்தில் புதிதாக ஹெலிகாப்டரை வாங்கி உள்ளேன். மீதமுள்ள பணத்தை பல்வேறு முதலீட்டு திட்டங்களில் டெபாசிட் செய்துள்ளேன். இதன் மூலம் மாதந்தோறும் நிறைவான வருவாய் கிடைத்து வருகிறது. தற்போது தொழிலதிபரை போன்று வாழ்ந்து வருகிறேன். அடுத்த மாதம் எனது நண்பர்களோடு தாய்லாந்துக்கு சுற்றுலா செல்ல திட்டமிட்டு உள்ளேன்” என்றார்.
நொய்டாவின் பன்வாரி பாஸ் கிராமத்தைச் சேர்ந்த மற்றொரு விவசாயி கூறும்போது, “விமான நிலையத்துக்கு நிலம் வழங்கியதால் சில கோடி ரூபாய் கிடைத்தது. இதில் புதிதாக வீடுகளை கட்டி வாடகைக்கு விட்டிருக்கிறேன். இதன் மூலம் நிறைவான வருவாய் கிடைக்கிறது. எங்கள் பகுதியைச் சேர்ந்த அனைவருமே திடீர் பணக்காரர்களாகி உள்ளோம். நொய்டா விமான நிலையம் எங்களது வாழ்க்கையை முற்றிலுமாக மாற்றிவிட்டது” என்றார்.














