அனைத்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி காணொலி வாயிலாக நேற்று முக்கிய ஆலோசனை நடத்தினார்.
அமெரிக்கா, ஈரான் இடையிலான போரால் உலகம் முழுவதும் கச்சா எண்ணெய், எல்பிஜி, எல்என்ஜி எரிவாயுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கிறது. இந்தியாவின் கச்சா எண்ணெய் தேவையில் சுமார் 85 சதவீதம் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிறது. இதேபோல நாட்டின் எல்பிஜி தேவையில் 60 சதவீதமும், எல்என்ஜி தேவையில் 50 சதவீதமும் இறக்குமதி செய்யப்பட்டு வருகிறது.
போர் காரணமாக வளைகுடா நாடுகளில் இருந்து கச்சா எண்ணெய், எரிவாயுவை இறக்குமதி செய்ய முடியவில்லை. இதைத் தொடர்ந்து ரஷ்யாவிடம் இருந்து அதிக அளவில் கச்சா எண்ணெய், எல்என்ஜி கொள்முதல் செய்யப்படுகிறது. மேலும் அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளில் இருந்து எல்பிஜி இறக்குமதி செய்யப்பட்டு வருகிறது.
தற்போதைய சூழலில் அடுத்த 60 நாட்களுக்கு தேவையான பெட்ரோல், டீசலும், அடுத்த ஒரு மாதத்துக்கு தேவையான எல்பிஜி காஸும் கையிருப்பில் உள்ளது. எனினும் சமூக வலைதளங்களில் பரவும் வதந்திகளால் பல்வேறு பகுதிகளில் செயற்கையான நெருக்கடி எழுகிறது.
பிரதமர் நரேந்திர மோடி நாடாளுமன்றத்தில் அண்மையில் பேசும்போது, “கரோனா பெருந்தொற்று காலத்தை போன்று தற்போதைய நெருக்கடியை மத்திய, மாநில அரசுகள் ஒன்றிணைந்து எதிர்கொள்ள வேண்டும்’’ என்று அழைப்பு விடுத்தார்.
இதைத் தொடர்ந்து அனைத்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி காணொலி வாயிலாக நேற்று இரவு முக்கிய ஆலோசனை நடத்தினார். இதில் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, சத்தீஸ்கர் முதல்வர் விஷ்ணு தியோ சாய், தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி, உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், காஷ்மீர் முதல்வர் ஒமர் அப்துல்லா, பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான், மத்திய பிரதேச முதல்வர் மோகன் யாதவ், ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன், உத்தராகண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி, குஜராத் முதல்வர் பூபேந்திர படேல், மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் உள்ளிட்டோர் பங்கேற்றனர். மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ராஜ்நாத் சிங் உள்ளிட்டோரும் ஆலோசனையில் கலந்து கொண்டனர்.
தமிழகம், புதுச்சேரி, கேரளம், மேற்குவங்கம், அசாம் மாநிலங்களில் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால் அந்த மாநில முதல்வர்கள் காணொலி கூட்டத்தில் பங்கேற்கவில்லை. எனவே 5 மாநிலங்களின் தலைமைச் செயலாளர்களுடன் மத்திய கேபினட் செயலாளர் தனியாக ஆலோசனை நடத்த உள்ளார்.














