மயானத்தில் எரியும் உடல்களுக்கு இடையே நடனம்: வாரணாசியில் தொடரும் 282 வருடப் பாரம்பரியம்

0
18

உத்தரப் பிரதேசம் மாநிலம் வாரணாசியின் மணிகர்னிகா மயானத்தில் எரியும் உடல்களுக்கு இடையே இளம் பெண்கள் நடனம் நடைபெற்றது. இரவு முழுவதுமான இந்த பாரம்பரிய நடன நிகழ்ச்சி, கடந்த 282 வருடங்களாகத் தொடர்கிறது.

உ.பி.யின் முக்கியப் புனித நகரமாக இருப்பது வாரணாசி. மிகவும் பழமையான நகரமாகக் கருதப்படும் இங்கு பல பாரம்பரியங்களும், கலாச்சாரங்களும் பல நூற்றாண்டுகளாகத் தொடர்கின்றன. இதில் ஒன்றாக தற்போது துவங்கி நடைபெறும் நவராத்திரி நாட்களில் மயான நடனம் இடம் பெற்றுள்ளது.

வாரணாசியின் கங்கை கரையில் உள்ள மணிகர்னிகா மயானத்தில் நேற்று முன்தினம் இரவு ’சைத்ர நவராத்திரி’ எனும் முக்கிய நாளில் மயான நடனம் நடைபெற்றது. வாரணாசியின் கங்கை கரைகளில் உள்ள மயானங்களில் மணிகர்னிகா மயான பெரியது. இதில் 24 மணி நேரமும் இடைவிடாமல் உடல்கள் எரிக்கப்படுகின்றன. ஏன் என்றால் மணிகர்னிகா மயானத்தில் நடைபெறும் ஈமச் சடங்குகள் ஆன்மாவிற்கு முக்தியை அளிக்கும் என்று நம்பப்படுகிறது.

மணிகர்னிகாவில் எரியும் உடல்களுடன் இடையே இரவு முழுவதும் சலங்கை ஒலியுடன் நடனம் தொடர்ந்தது. இதற்காக மேடை அமைத்து நகரவதூக்கள் என்றழைக்கப்படும் பெண்கள் நடனமாடுகின்றனர். இப்பெண்ககளுடன் திருநங்கைகளும் இசை நிகழ்ச்சியில் கலந்து கொள்கின்றனர்.

இதன் மூலம் அடுத்த பிறவி, மேம்பட்டதாக அமையும் என்பது நம்பிக்கையாக உள்ளது. இவர்கள், மயானங்களின் காவலராகக் கருதப்படும் ‘பாபா மசான் நாத்’ அவர்களுக்கான அஞ்சலியை நடனமாடி செலுத்துகின்றனர் என்று கூறப்படுகிறது.

இக்கொண்டாட்டத்தின் மூலம், சடலங்கள் கூட வழிபாட்டுக்கு உரியவை எனக் கருதப்படுகிறது. கடந்த 382 ஆண்டுகளாக இந்த வியப்பிற்குரிய பாரம்பரியம் தொடர்கிறது. இது வெறும் ஒரு கலைநிகழ்ச்சியாக மட்டும் அன்றி, ஆன்மிக வழிபாடாகவும் கருதப்படுகிறது.

இந்த நிகழ்ச்சியில் வாரணாசி மட்டுமின்றி அதைச் சுற்றியுள்ள பிற மாவட்டங்களில் இருந்து வந்து நடனமாடுகின்றனர். ‘பாபா மசான் நாத்’துக்காக நடைபெறும் மூன்று நாள் வருடாந்திர சிருங்கார விழாவின் இறுதி நாளில், தங்கள் நடனத்தை அவருக்கு அர்ப்பணிக்கின்றனர்.

மணிகர்னிகா மயானத்தில் சடலங்கள் தொடர்ந்து வரும் நிலையில், அங்குள்ள மேடையில் இசையின் தாளத்திற்கு ஏற்ப நடனமும் தொடர்கிறது. ஆனால், வட மாநிலத்தவர்கள் இறப்பவர்களின் இறுதி ஊர்வலங்களில் எவரும் நடனமாடுவதில்லை. மாறாக, மணி அடித்தப்படி, ‘ராம் ராம் சத்ய ஹை’ என அமைதியான கோஷத்துடன் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்படுகின்றன.

இது குறித்து ‘இந்து தமிழ் திசை’-க்கு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட திருநங்கையான பப்பு கூறுகையில், ”17ம் நூற்றாண்டில், காசியை ஆண்ட மன்னர் மான்சிங், இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க கங்கை கரையில், சுடுகாட்டின் அதிபதியாகவும் ‘மசான் நாத்’ என்றும் போற்றப்படும் சிவபெருமானுக்காக ஒரு ஆலயத்தைக் கட்டினார். அந்த இடத்தில் ஒரு இசை நிகழ்ச்சியை நடத்த அவர் விரும்பினார். எந்தவொரு கலைஞரும் அங்கு வரத் துணியவில்லை. இதனால், அப்போது வாழ்ந்த பாலியல் தொழிலாளிகள் மட்டுமே அதற்காக முன் வந்தனர்.

கங்கை நதிக்கரையில் அமைந்துள்ள மசான் நாத்தின் சன்னிதியில், அவர்கள் தங்கள் நடனத்தை அர்ப்பணித்தனர். அந்தக் காலத்தில் இருந்தே தொடர்ந்து வரும் இந்த மரபு, இன்றும் அதே பக்தியுடனும் நம்பிக்கையுடனும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது’ எனத் திருநங்கை பப்பு தெரிவித்தார்.

இந்துக்களின் கடவுள் விஷ்ணுவால் வாரணாசியின் இந்த மணிகர்னிகா மயானம் அமைக்கப்பட்டதாக நம்பிக்கை உள்ளது. இதைப் பற்றிய பதிவுகள், 5-ம் நூற்றாண்டில் குப்தர்கள் ஆட்சிக் காலத்தின் ஓலைச்சுவடிகள் இடம் பெற்றுள்ளன. காசி விஸ்வநாதர் கோயிலின் அருகில் கங்கை கரையில் இந்த மணிகர்னிகா மயானம் அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here