தமிழக எம்பிக்கள் மாணிக்கம் தாகூர், வெங்கடேசன் உட்பட 8 எம்பிக்களின் சஸ்பெண்ட் ரத்து செய்யப்பட்டு உள்ளது.
பட்ஜெட் கூட்டத் தொடரின் முதல் அமர்வின்போது மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, இந்தியா, சீனா எல்லைப் பிரச்சினை குறித்து பேச முயன்றார். அப்போது அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இந்த விவகாரம் தொடர்பாக கடந்த பிப்ரவரி 3ம் தேதி, மக்களவைத் தலைவரின் இருக்கையை முற்றுகையிட்டு எதிர்க்கட்சி எம்பிக்கள் கோஷமிட்டனர். அப்போது அவர்கள் காகிதங்களை கிழித்து வீசியெறிந்தனர்.
இதையடுத்து மக்களவையில் அத்துமீறி நடந்து கொண்டதாக 374வது பிரிவின் கீழ் 8 எம்பிக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். இதன்படி தமிழக எம்பிக்கள் மாணிக்கம் தாகூர், வெங்கடேசன் மற்றும் ஹிபி ஈடன், குர்ஜித் சிங் அவுஜ்லா, கிரண் குமார் ரெட்டி, பிரசாந்த் படோல், டீன் சூரியகோஸ் ஆகியோர் கூட்டத் தொடர் முழுவதும் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். இந்த சூழலில் பட்ஜெட் கூட்டத் தொடரின் 2-வது அமர்வு கடந்த 9-ம் தேதி தொடங்கியது.
சமையல் காஸ் தட்டுப்பாடு, எம்பிக்கள் சஸ்பெண்ட் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் எதிர்க்கட்சி எம்பிக்கள் அமளியில் ஈடுபட்டு வந்தனர். இந்த சூழலில் மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா நேற்று முன்தினம் அனைத்துக் கட்சி கூட்டத்தை நடத்தினார். அப்போது மக்களவையை சுமுகமாக நடத்துவது குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது. இதன் ஒரு பகுதியாக 8 எம்பிக்களின் சஸ்பெண்ட் உத்தரவை ரத்து செய்ய ஒருமனதாக முடிவு எடுக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து மக்களவை நேற்று காலை கூடியது. அப்போது 8 எம்பிக்களின் சஸ்பெண்ட் உத்தரவை ரத்து செய்யக் கோரும் தீர்மானத்தை நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு தாக்கல் செய்தார். இந்த தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.
இதன்படி தமிழக எம்பிக்கள் மாணிக்கம் தாகூர், வெங்கடேசன் உட்பட 8 எம்பிக்களின் சஸ்பெண்ட் உத்தரவு ரத்து செய்யப்பட்டது. அவர்கள் நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள மகாத்மா காந்தியின் சிலைக்கு மரியாதை செலுத்திவிட்டு அவை நடவடிக்கைகளில் பங்கேற்றனர்.
இது குறித்து காங்கிரஸ் எம்பி சசி தரூர் நாடாளுமன்ற வளாகத்தில் நிருபர்களிடம் கூறும்போது, “இது நல்ல முடிவு. சஸ்பெண்ட் பிரச்சினைக்கு சுமுக தீர்வு காணப்பட்டு உள்ளது” என்று தெரிவித்தார்.
காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி கூறும்போது, “இது வரவேற்கத்தக்க முடிவு. எதிர்க்கட்சிகள் மட்டுமன்றி ஆளும் கட்சி எம்பிக்களும் அவையில் கண்ணியத்தை கடைப்பிடிக்க வேண்டும்” என்று தெரிவித்தார்.
பாஜக எம்.பி ரவி கிஷண் கூறும்போது, “மக்கள் நலன் சார்ந்த பிரச்சினைகளை மட்டுமே அவையில் பேச வேண்டும். அவையில் ஆக்கப்பூர்வமான விவாதங்கள் மட்டுமே நடைபெற வேண்டும். தனிநபர் தாக்குதல்களை தவிர்க்க வேண்டும்” என்று தெரிவித்தார்.














