தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரை பதவி நீக்கம் செய்யக் கோரும் தீர்மானத்துக்கான நோட்டீஸை நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் எதிர்க்கட்சிகள் நேற்று சமர்ப்பித்தன.
கடந்த ஆண்டு பிப்ரவரி 19-ம் தேதி தலைமைத் தேர்தல் ஆணையராக ஞானேஷ் குமார் பதவியேற்றார். இதைத் தொடர்ந்து கடந்த ஆண்டு பிஹாரில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி நடைபெற்றது.
இதைத் தொடர்ந்து தமிழ்நாடு, மேற்குவங்கம், குஜராத், மத்திய பிரதேசம், ராஜஸ்தான் உள்ளிட்ட 12 மாநிலங்களில் அண்மையில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி (எஸ்ஐஆர்) நடைபெற்றது. இந்த மாநிலங்களில் லட்சக்கணக்கான வாக்காளர்கள் நீக்கப்பட்டனர். இதற்கு காங்கிரஸ், திரிணமூல் காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
எஸ்ஐஆர் மூலம் வாக்கு திருட்டு நடைபெறுவதாகவும், தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பாஜகவுக்கு ஆதரவாக செயல்படுவதாகவும் எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன. இந்த விவகாரம் தொடர்பாக தலைமைத் தேர்தல் ஆணையரை பதவி நீக்கக் செய்யக் கோரும் தீர்மானத்துக்கான நோட்டீஸை நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் எதிர்க்கட்சிகள் நேற்று சமர்ப்பித்தன. இந்த நோட்டீஸில் மக்களவையின் 130 எம்பிக்கள், மாநிலங்களவையின் 63 எம்பிக்கள் என மொத்தம் 193 எம்பிக்கள் கையெழுத்திட்டு உள்ளனர்.
பத்து பக்கங்கள் கொண்ட நோட்டீஸில் ஞானேஷ்குமார் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு உள்ளன. இதுகுறித்து சட்ட நிபுணர்கள் கூறியதாவது:
கடந்த 1990-களில் டி.என்.சேஷன் மற்றும் 2006-ல் நவீன் சாவ்லா ஆகியோரை பதவி நீக்கம் செய்யக் கோரி விவாதங்கள் எழுந்தன. ஆனால் அவர்களுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் தீர்மானம் கொண்டு வரப்படவில்லை. இந்திய தேர்தல் வரலாற்றில் முதல்முறையாக தற்போதைய தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எதிராக நோட்டீஸ் வழங்கப்பட்டு உள்ளது.
இந்த நோட்டீஸை மக்களவை சபாநாயகரிடம் சமர்ப்பிக்க குறைந்தபட்சம் 100 எம்பிக்கள் கையெழுத்திட வேண்டும். தற்போது வழங்கப்பட்டிருக்கும் நோட்டீஸில் 130 எம்பிக்கள் கையெழுத்திட்டு உள்ளனர். இதேபோல மாநிலங்களவை தலைவரிடம் நோட்டீஸை சமர்ப்பிக்க 50 எம்பிக்கள் கையெழுத்திட வேண்டும். இதன்படி 63 எம்பிக்கள் நோட்டீஸில் கையெழுத்திட்டு உள்ளனர்.
இரு அவைகளிலும் நோட்டீஸ் ஏற்கப்பட்டால் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அல்லது உச்ச நீதிமன்ற நீதிபதி, உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி, மூத்த சட்ட நிபுணர் அடங்கிய சிறப்புக் குழு அமைக்கப்படும். இந்த குழு அனைத்து தரப்பினரிடமும் விசாரணை நடத்தும்.
தலைமைத் தேர்தல் ஆணையருக்கு எதிரான குற்றச்சாட்டுக்கு முகாந்திரம் இருப்பதாக சிறப்புக் குழு கருதினால் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் தீர்மானம் கொண்டு வர அனுமதி வழங்கப்படும். இதை நிறைவேற்ற மூன்றில் இரு பங்கு எம்பிக்களின் ஆதரவு தேவை. ஒருவேளை தலைமைத் தேர்தல் ஆணையருக்கு எதிரான குற்றச்சாட்டுக்கு முகாந்திரம் இல்லை என்று சிறப்பு குழு தீர்மானித்தால், நோட்டீஸ் ரத்து செய்யப்படும். நாடாளுமன்றத்தில் தீர்மானம் கொண்டு வரப்படாது. இவ்வாறு சட்ட நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.














