சத்தீஸ்கர் மாநிலம் பஸ்தார் பிராந்தியத்தில் 108 மாவோயிஸ்ட்கள் பாதுகாப்புப் படையினரிடம் நேற்று சரணடைந்தனர். இவர்களின் தலைக்கு அரசு ரூ.3.95 கோடி வெகுமதி அறிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலின்படி, சரணடைந்தவர்களில் 8 பேர் மாவோயிஸ்ட்களின் முக்கியக் குழு உறுப்பினர்கள் ஆவர். மார்ச் 31-ம் தேதிக்குள் இந்தியாவில் மாவோயிஸத்தை முற்றிலும் ஒழிப்பதாக மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. இந்நிலையில், பிஜப்பூர் மாவட்டத்திலிருந்து 37 பேரும், தந்தேவாடாவில் இருந்து 30 பேரும் சரணடைந்துள்ளனர்.
சரணடைந்த மாவோயிஸ்ட்கள் அளித்த தகவலின் அடிப்படையில், அவர்கள் மறைத்து வைத்திருந்த மிகப்பெரிய ஆயுதக் கிடங்கை பாதுகாப்புப் படையினர் கண்டறிந்து பறிமுதல் செய்தனர். மாவோயிஸ்ட் எதிர்ப்பு நடவடிக்கை வரலாற்றிலேயே இதுவே மிகப்பெரிய ஆயுதப் பறிமுதல் என்று காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு 21 உறுப்பினர்களுடன் இயங்கிவந்த மாவோயிஸ்ட் மத்திய குழுவில் தற்போது 2 பேர் மட்டுமே தலைமறைவாக உள்ளனர். ஒரு சிலர் சரணடைந்துள்ளனர். மற்றவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.














