சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு எதிரான தீர்மானம் தோல்வி

0
28

நா​டாளு​மன்ற பட்​ஜெட் கூட்​டத்​தொடரில், மக்​களவை சபா​நாயகர் ஓம் பிர்​லா​விற்கு எதி​ராக எதிர்க்​கட்​சிகள் கொண்டு வந்த நம்​பிக்​கை​யில்லா தீர்​மானம் தோல்​வியடைந்​த​து.

மக்​களவை​யில் கடும் அமளி மற்​றும் முழக்​கங்​களுக்கு இடையே, அவையை நடத்​திக் கொண்​டிருந்த ஜெக​தாம்​பிகா பால், சபா​நாயகரை நீக்​கக் கோரும் தீர்​மானம் தோல்​வியடைந்​ததை அதி​காரப்​பூர்​வ​மாக அறி​வித்​தார். முன்​ன​தாக, மத்​திய உள்​துறை அமைச்​சர் அமித் ஷாவின் உரைக்கு எதிர்ப்பு தெரி​வித்து எதிர்க்கட்சி உறுப்​பினர்​கள் முழக்​கமிட்​டனர்.

தீர்​மானத்​தின் மீது வாக்​கெடுப்பு நடத்த ஒத்​துழைக்​கு​மாறும், உறுப்​பினர்​கள் தங்​களது இருக்​கைகளுக்​குத் திரும்​பு​மாறும் ஜெக​தாம்​பிகா பால் வேண்​டு​கோள் விடுத்​தார். எனினும், அமளி தொடர்ந்​த​தால் குரல் வாக்​கெடுப்பு நடத்​தப்​பட்டு தீர்​மானம் நிராகரிக்​கப்​பட்​டது. இதனைத் தொடர்ந்து மக்​களவை மற்​றும் மாநிலங்​களவை அவை நாள் முழு​வதும் ஒத்​திவைக்​கப்​பட்​டது.

அமித் ஷா தாக்கு: விவாதத்​தின் போது பேசிய மத்​திய உள்​துறை அமைச்​சர் அமித் ஷா, காங்​கிரஸ் எம்​.பி. ராகுல் காந்​தியை கடுமை​யாக விமர்​சித்​தார். அப்​போது அவர் கூறுகை​யில், “ ராகுல் காந்தி கட்​சிப் பணி​களுக்​காகப் பல்​வேறு இடங்​களுக்​கு, வெளி​நாடு​களுக்கு செல்​கிறார். ஆனால் குடியரசுத் தலை​வர் உரை, மத்திய பட்​ஜெட் தாக்​கல் மற்​றும் 370-வது சட்​டப்​பிரிவு தொடர்பான முக்​கிய விவாதங்​களின் போது ராகுல் காந்தி அவையில் இருப்பதில்​லை. முக்​கிய​மான கூட்​டத்​ தொடர்​களின் போது வெளி​நாடு​களுக்​குச் சென்​று​விட்​டு, பின்​னர் தமக்கு பேச வாய்ப்பளிக்கப்​படு​வ​தில்லை என்று குற்​றம் சாட்​டு​கிறார்.

மக்​களவையைப் பொருத்​தவரை​யில் காங்​கிரஸ் 175 மணி நேரத்துக்​கும் மேலாக பேசி​யுள்​ளது. அப்​போது எந்த சபா​நாயகர் உங்​களை தடுத்​தார் ? 17-வது மக்​களவை​யில் ராகுல் காந்​தி​யின் வருகை 51 சதவீத​மாக​வும் (சராசரி 66%), 16-வது மக்​களவை​யில் 52 சதவீத​மாக​வும் (சராசரி 80%) மட்​டுமே இருந்​துள்​ளது.

கடந்த 75 ஆண்​டு​கால வரலாற்​றில் சபா​நாயகருக்கு எதி​ராக 3 முறை மட்டுமே நம்​பிக்​கை​யில்லா தீர்​மானம் கொண்டு வரப்​பட்​டுள்​ளது. பாஜக அல்​லது தேஜ கூட்​டணி சார்​பில் ஒரு​முறை கூட சபாநாயகருக்கு எதி​ரான தீர்​மானம் கொண்டு வரப்​பட​வில்​லை. இவ்​வாறு மத்திய அமைச்சர் அமித் ஷா கூறி​னார்.

அமித் ஷாவின் இந்​தப் பேச்​சுக்கு எதிர்ப்​புத் தெரி​வித்த எதிர்க்கட்சி​யினர், அவர் மன்​னிப்பு கேட்க வேண்​டும் என முழக்​கங்​களை எழுப்​பினர்.

எதிர்க்​கட்​சிகள் கொண்டு வந்த நம்​பிக்​கை​யில்லா தீர்மானம் தோல்​வியடைந்​ததை தொடர்ந்​து, இத்​தனை நாட்​களாக சபை நடவடிக்​கை​யில் இருந்து வில​கி​யிருந்த சபா​நாயகர் ஓம் பிர்லா இன்று முதல் சபையை வழிநடத்த உள்​ளார். எதிர்க்கட்சிகளின் நடவடிக்​கைகள் குறித்து இன்று அவர் அறிக்கை அளிக்கவும் திட்​ட​மிட்​டுள்​ள​தாக கூறப்​படு​கிறது.

முன்​ன​தாக செவ்​வாய்க்​கிழமை நடை​பெற்ற விவாதத்​தின் போது, துணை சபா​நாயகர் பதவி காலி​யாக இருப்​பது, எதிர்க்​கட்சி உறுப்பினர்​களின் மைக்​கைத் துண்​டிப்​பது மற்​றும் உறுப்பினர்கள் ஒட்டுமொத்​த​மாக இடைநீக்​கம் செய்​யப்​படு​வது போன்ற செயல்​கள் சபா​நாயகர் நடுநிலை தவறு​வதை உணர்த்​துகிறது என்​பது உள்ளிட்ட பல்​வேறு புகார்​களை எதிர்க்​கட்​சித்​ தலைவர்கள்​ முன்வைத்து அமளி​யில்​ ஈடு​பட்​டது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here