மகாராஷ்டிர மாநிலம் தானே மாவட்டம் பிவாண்டியைச் சேர்ந்த 20 வயது இளைஞர், சமூக வலைதளம் மூலம் கடந்த 2024-ம் ஆண்டு மைனர் பெண் ஒருவருடன் பழகி உள்ளார். பின்னர் இருவரும் நேரில் சந்தித்து நெருக்கமாகப் பழகி உள்ளனர்.
இந்நிலையில், கடந்த மாதம் தான் அந்தப் பெண்ணுக்கு 18 வயதாகி உள்ளது. இதையடுத்து தன்னுடைய மதத்துக்கு மாறி திருமணம் செய்து கொள்ளும்படி அந்தப் பெண்ணுக்கு இளைஞர் மிரட்டல் விடுத்து வந்துள்ளார். பயந்து போன இளம்பெண் கடந்த 6ம் தேதி பிவாண்டிக்கு சென்றுள்ளார். அங்கு அவருக்கும் அந்த இளைஞருக்கும் ‘நிக்கா’ நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது.
இதற்கிடையில் பெண்ணின் உறவினர்கள் இந்துத்துவா அமைப்பைச் சேர்ந்தவர்களுக்குத் தகவல் கொடுத்தனர். அவர்கள் உடனடியாக நிக்கா நடக்கவிருந்த இடத்துக்கு விரைந்து சென்று அந்த இளம் பெண்ணை மீட்டு போலீஸில் ஒப்படைத்தனர்.
அங்கு பெண்ணிடம் விசாரணை நடத்தியதில், தன்னை 2 ஆண்டுகளாக பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாகவும், கட்டாயப்படுத்தி மதம் மாற கூறியதாகவும் புகார் கூறியுள்ளார். அதன் அடிப்படையில் அவரைப் போலீஸார் கைது செய்தனர். அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.














