உலகளவில் ஆயுதங்களை இறக்குமதி செய்யும் நாடுகளின் பட்டியலில் இந்தியா 2-ம் இடத்தில் இருப்பதாக ஸ்டாக்ஹோம் சர்வதேச அமைதி ஆராய்ச்சி நிறுவனத்தின் (சிப்ரி) ஆய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சீனா மற்றும் பாகிஸ்தான் எல்லைகளில் நிலவும் பதற்றமான சூழலே இந்தியா அதிக அளவில் ஆயுதங்களை வாங்கி குவிப்பதற்கு முக்கியக் காரணமாக கூறப்படுகிறது. இது குறித்து அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: கடந்த 2016- 20 கால கட்டத்தை விட, 2021- 25 கால கட்டத்தில் இந்தியாவின் ஆயுத இறக்குமதி 4% குறைந்துள்ளது.
இருப்பினும், உலக ஆயுத இறக்குமதியில் இந்தியா 8.2% பங்குடன் இரண்டாமிடத்தில் உள்ளது. உக்ரைன் (9.7%) முதலிடத்தில் உள்ளது. தற்சார்பு இந்தியா திட்டத்தின் கீழ் உள்நாட்டிலேயே ஆயுதங்கள் தயாரிப்பது அதிகரித்துள்ளதால் இறக்குமதி ஓரளவு குறைந்துள்ளது.
இந்தியாவின் முதன்மை ஆயுத விநியோகஸ்தராக ரஷ்யா (40%) நீடித்தாலும், கடந்த 15 ஆண்டுகளில் ரஷ்யாவிடம் இருந்து வாங்கும் அளவு பாதியாகக் குறைந்துள்ளது. தற்போது பிரான்ஸ் (29%) மற்றும் இஸ்ரேல் (15%) ஆகிய நாடுகளிடம் இருந்து இந்தியா அதிக ஆயுதங்களைப் பெறுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.














