சஞ்சு சாம்சன் அபாரம்: இங்கிலாந்துக்கு 254 ரன்கள் இலக்கு | T20 WC Semi Final

0
193

நடப்பு ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இரண்டாவது அரையிறுதி ஆட்டத்தில் இங்கிலாந்து அணிக்கு 254 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது இந்திய அணி.

இந்த ஆட்டத்தில் இந்திய வீரர் சஞ்சு சாம்சன், இங்கிலாந்து பவுலர்களின் பந்துவீச்சை துவம்சம் செய்தார். அவர் கொடுத்த சிறப்பான தொடக்கத்தை மற்ற இந்திய வீரர்கள் பயன்படுத்தி ரன் குவித்தனர்.

மும்பையில் உள்ள வான்கடே கிரிக்கெட் மைதானத்தில் இந்த ஆட்டம் நடைபெறுகிறது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்து வீச முடிவு செய்தது. இந்திய அணிக்காக சஞ்சு சாம்சன் மற்றும் அபிஷேக் சர்மா இணைந்து இன்னிங்ஸை தொடங்கினர். இதில் சஞ்சு சாம்சன் தொடக்கம் முதலே அதிரடியாக ஆடினார். அபிஷேக் சர்மா 7 பந்துகளில் 9 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

தொடர்ந்து வந்த இஷான் கிஷன் உடன் 97 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தார் சஞ்சு சாம்சன். இதன் பலனாக இந்திய அணி 10 ஓவர்கள் முடிவில் 119 ரன்கள் எடுத்திருந்தது. இஷான் கிஷன், 18 பந்துகளில் 39 ரன்கள் விளாசி ஆட்டமிழந்தார். இதையடுத்து ஷிவம் துபே களத்துக்கு வந்தார். அவருடன் சேர்ந்து 43 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தார் சஞ்சு சாம்சன்.

அதிரடியாக ஆடிய சஞ்சு சாம்சன், 43 பந்துகளில் 89 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். 8 பவுண்டரி மற்றும் 7 சிக்ஸர்கள் அவரது இன்னிங்ஸில் அடங்கும். கேப்டன் சூர்யகுமார் யாதவ், 6 பந்துகளில் 11 ரன்கள் எடுத்தார்.

25 பந்துகளில் 43 ரன்கள் எடுத்து சிறப்பாக ஆடி வந்த ஷிவம் துபே, ரன் அவுட் ஆனார். திலக் வர்மா, 7 பந்துகளில் 21 ரன்கள் எடுத்தார். ஹர்திக் பாண்டியா, 12 பந்துகளில் 27 ரன்கள் எடுத்து ரன் அவுட் ஆனார். அக்சர் படேல் 2 ரன்கள் எடுத்தார். 20 ஓவர்களில் இந்திய அணி 7 விக்கெட் இழப்புக்கு 253 ரன்கள் எடுத்தது. இந்த ஆட்டத்தில் இங்கிலாந்து வெற்றி பெற 254 ரன்கள் தேவை.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here