‘500 ரன்கள்’ பிட்சில் பும்ரா நிகழ்த்திய அற்புதம், அக்சரின் 2 கேட்ச்… – இந்திய வெற்றியின் அடித்தளம்!

0
21

மும்பையில் நேற்று நடைபெற்ற ஐசிசி டி20 உலகக் கோப்பை அரையிறுதி ஆட்டத்தில் வீசப்பட்ட 40 ஓவர்களில் 499 ரன்கள் குவிக்கப்பட்டன. இத்தகைய மட்டரகமான மட்டைப் பிட்சில் பும்ரா நிகழ்த்தியது உண்மையில் மிகப்பெரிய அற்புதம் என்றுதான் கூற வேண்டும். அதே போல் அக்சர் படேலின் 2 ‘மேட்ச் டர்னிங்’ கேட்ச்களும் இந்திய வெற்றியில் மிக மிக முக்கியமானவை.

சஞ்சு சாம்சன் இன்னிங்ஸ் பற்றி சொல்வதற்கில்லை, இனி அவர் அப்படித்தான் ஆடுவார். ஆடப்போகிறார்… ஷுப்மன் கில்லை டி20 கிரிக்கெட்டில் கொண்டு வர இனி கவுதம் கம்பீர் வேறொரு வீரரைத்தான் பலிகடாவாக்க வேண்டும். இது ஒன்று வயதான சூர்யகுமார் யாதவாக இருக்கலாம், இல்லை இருக்கவே இருக்கிறார் திலக் வர்மா. சரி! நாம் பும்ராவின் நேற்றைய பவுலிங் ஸ்பெல்லுக்கு வருவோம்.

சஞ்சு சாம்சன், மேற்கு இந்தியத் தீவுகளுக்கு எதிராக ஜென் பவுத்த ரக மனநிலையில் எடுத்த 97 ரன்களுக்குப் பிறகு நேற்று மீண்டும் 42 பந்துகளில் 89 ரன்களை விளாசி தள்ளினார். ஹாரி புரூக் விட்ட கேட்சுக்கு அவர் நன்றி கூற வேண்டும்.

ஒருவிதத்தில் ஜேக்கப் பெத்தேல் சதம் எடுத்தும் இங்கிலாந்தினால் வெற்றி பெற முடியாததற்கு காரணங்கள் உள்ளன. ஒன்று சஞ்சு சாம்சனுக்கு கேட்சை விட்டதன் மூலம் 50 ரன்கள் கூடுதலாக வந்தது. இரண்டாவது அக்சர் படேல் புரூக்கிற்கு எடுத்த அந்த கேட்ச் கிட்டத்தட்ட 1983 உலகக் கோப்பையில் கபில் தேவ், ரிச்சர்ட்ஸுக்கு எடுத்த கேட்சுடன் ஒப்பிடத்தகுந்தது.

எப்படியெனில் பிரஷர் அளவில், ஆனால் இந்தக் கேட்ச் அதை விடவும் பன் மடங்கு கடினமானது. மூன்றாவதும் காரணம் பும்ராவின் அசாத்திய பந்து வீச்சு. இதுதான் இங்கிலாந்தின் தோல்விக்கு காரணமாக அமைந்தது.

இங்கிலாந்து பில் சால்ட் பவுண்டரி மூலம் தொடங்கியது, பிறகு பட்லர் ஒரு பிரமாதமான சிக்ஸரை கவருக்கு மேல் தூக்கினார். ஆனால், இந்திய அணியின் பிரதான ஆயுதம் பும்ரா ரிசர்வில் வைக்கப்பட்டிருந்தார். பும்ரா பந்து வீச வந்தார். வந்தவுடன் அபாய வீரர் ஹாரி புரூக்கிற்கு கட்டர் ஒன்றை வீச அது ஸ்லோ பந்து என்பதால் புரூக்கின் ஷாட் தாக்கம் இல்லாமல் போக ஆளே இல்லாத இடத்தில் பந்து காற்றில் சென்று கொண்டிருந்தது.

30 யார்டு வட்டத்தின் விளிம்பில் நின்று கொண்டிருந்த அக்சர் படேல் ஆஃப் திசையில் பல அடிகள் பின்னாலேயே ஓடி கடைசியில் ஒரு அபாரமான டைவ் மூலம் இந்த உலகக் கோப்பையின் ஆகச்சிறந்த கேட்ச்சை எடுக்க புரூக் ஆட்டமிழந்தார். இங்கிலாந்து சொரத்தை இழந்தது.

அதன் பிறகு பும்ரா பின்னணிக்குச் சென்றார். மீண்டும் 11-வது ஓவர்தான் வந்தார். யார்க்கர், டிப்பிங் ஃபுல்டாஸ் என்று பும்ரா வீச வில் ஜாக்ஸ் ஒரு அற்புதமான பவுண்டரியையும் திகைப்பூட்டும் இன்னிங்ஸின் மத்தியில் இருந்த ஜேக்கப் பெத்தேல் ஒரு ஷார்ட் ஆர்ம் புல்லும் ஆடி பவுண்டரிகளுக்கு விரட்ட 12 ரன்கள் அந்த ஓவரில் வந்தது.

மீண்டும் 16-வது ஓவரை வீச வந்தார் பும்ரா. அப்போது இங்கிலாந்துக்குத் தேவை ஓவருக்கு 13.80. ஜேக்கப் பெத்தேல் அபாயகரமான வீரராக அப்போது எழுச்சி பெற்று 36 பந்துகளில் 81 ரன்கள் என்று இருந்தார். 16-வது ஓவரில் வேகத்தைக் கூட்டியும் குறைத்தும் யார்க்கர்களை வீச 8 ரன்களே வந்தது.

அதன்பின், மீண்டும் 18-வது ஓவரில் பும்ரா பந்து வீச அழைக்கப்பட இங்கிலாந்துக்கு தேவை ஓவருக்கு 15 ரன்கள் என்று இருந்தது, பெத்தேல் 94-ல் இருந்தார். இந்த ஓவரில் பும்ரா 6 யார்க்கர் அல்லது யார்க்கர் போன்ற லெந்த் பந்துகளை வீசி பெத்தேலையும், சாம் கரணையும் முடக்கினார். பவுண்டரியே வரவில்லை. இங்கிலாந்து அணியால் வெறும் 6 ரன்களே எடுக்க முடிந்தது.

டி20 கிரிக்கெட்டின் அதியற்புத ஓவர்களில் ஒன்றாக இது பலகாலம் நினவில் கொள்ளப்படும். இந்த ஓவருக்குப் பிறகே இங்கிலாந்துக்குத் தேவைப்படும் ரன் விகிதம் ஓவருக்கு 19.50 என்று ஆனது. இது ஏறக்குறைய சாத்தியமற்றது.

பெத்தேலும் இல்லாத 2-வது ரன்னுக்கு ஓடப்போய் ஆட்டமிழக்க இங்கிலாந்தின் கதை முடிந்தது. அதன் பிறகு கடைசி ஓவரை துபே ஓவரில் ஆர்ச்சர் அடித்த சிக்ஸர் ஒவ்வொன்றும் வெறும் பேப்பர் சிக்ஸர்கள்தான். அதனால் எந்த ஒரு பயனுமில்லாமல் போனது.

ஆட்ட நாயகன் விருது பெற்ற சஞ்சு சாம்சன், கூறும்போது, “பும்ராவுக்குத்தான் ‘மேன் ஆஃப் த மேட்ச்’ விருது கொடுக்கப்பட்டிருக்க வேண்டும், அவர் இல்லையென்றால் நான் இங்கு இப்போது நின்று கொண்டிருக்க மாட்டேன்” என்றார். இதுதான் ஸ்டேட்மெண்ட், ஆனால் நம்ம பயிற்சியாளர் கம்பீரை நினைத்தால்தான் பயமாக இருக்கிறது.

‘ஷிவம் துபேயின் அந்த கடைசி ஓவரால்தான் பும்ரா பேசப்படுகிறார் இல்லையென்றால் பும்ரா பேசப்பட மாட்டார்’ என்று கம்பீர் உளறிக் கொட்டாமல் இருந்தால் சரி.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here