அணு ஆயுதம் தயாரிக்கத் தேவையான யுரேனியத்தை செறிவூட்டி வருவதாகக் குற்றம்சாட்டி, ஈரானில் கடந்த சனிக்கிழமை முதல் அமெரிக்க- இஸ்ரேல் கூட்டுப் படைகள் தாக்குதல் நடத்தி வருகின்றன.
இதையடுத்து ஈரானும் பல்வேறு அமெரிக்க விமான தளங்களை குறிவைத்து பதில் தாக்குதல் தொடுத்து வருகிறது. இந்நிலையில் டெஹ்ரான் நகரிலுள்ள இந்திய மாணவர்களை பாதுகாப்பான இடங்களுக்கு இந்தியத் தூதரகம் நேற்று மாற்றியுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை அங்குள்ள தூதரக அதிகாரிகள் செய்துள்ளனர்.
இதுகுறித்து டெஹ்ரான் நகரில் செயல்பட்டு வரும் இந்தியத் தூதரகம் சார்பில் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறும்போது, “போர்ப் பதற்றம் காரணமாக டெஹ்ரான் நகரிலுள்ள இந்திய மாணவர்களை பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றியுள்ளோம்.
டெஹ்ரானுக்கு வெளியே அமைந்துள்ள இடங்களில் அவர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்குத் தேவையான போக்குவரத்து, உணவு, தங்குமிட வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இந்த இடமாற்றத்தை விரும்பாத சில மாணவர்கள் மட்டும் டெஹ்ரானிலேயே தங்கியுள்ளனர்” என்று கூறப்பட்டுள்ளது.














