ஐசிசி மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் ஜூன் 12 முதல் ஜூலை 5 வரை இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் நாட்டில் நடைபெறுகிறது. இம்முறை 12 அணிகள் கலந்து கொள்கின்றன. இவை 2 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன.
குரூப் 1-ல் ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா, இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம், நெதர்லாந்து அணிகள் இடம் பெற்றுள்ளன. குரூப் 2-ல் நடப்பு சாம்பியனான நியூஸிலாந்து, மேற்கு இந்தியத் தீவுகள், இங்கிலாந்து, இலங்கை, அயர்லாந்து, ஸ்காட்லாந்து அணிகள் இடம் பெற்றுள்ளன.
வங்கதேசம், அயர்லாந்து, ஸ்காட்லாந்து, நெதர்லாந்து ஆகிய 4 அணிகளும் தகுதி சுற்றின் வாயிலாக பிரதான சுற்றில் நுழைந்துள்ளன. இதில் நெதர்லாந்து அணி முதன்முறையாக டி 20 உலகக் கோப்பையில் களமிறங்க உள்ளது. 24 நாட்கள் நடைபெறும் இந்தத் தொடரில் மொத்தம் 33 ஆட்டங்கள் நடத்தப்பட உள்ளன.
இந்த போட்டிக்கான அட்டவணையை ஐசிசி வெளியிட்டுள்ளது. தொடக்க ஆட்டத்தில் ஜூன் 12-ம் தேதி இங்கிலாந்து – இலங்கை அணிகள் மோதுகின்றன. நடப்பு சாம்பியனான நியூஸிலாந்து 13-ம் தேதி மேற்கு இந்தியத் தீவுகளுடன் மோதுகிறது. இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் 14-ம் தேதி பாகிஸ்தானுடன் பலப்பரீட்சை நடத்துகிறது.














