ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் கொழும்பு நகரில் உள்ள ஆர்.பிரேமதாசா மைதானத்தில் நேற்று ‘பி’ பிரிவில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியனான இலங்கை, ஜிம்பாப்வே அணியுடன் விளையாடியது. முதலில் பேட் செய்த இலங்கை அணி 7 விக்கெட்கள் இழப்புக்கு 178 ரன்கள் குவித்தது.
தனது 19-வது அரை சதத்தை அடித்த தொடக்க வீரரான பதும் நிசங்கா 41 பந்துகளில், 8 பவுண்டரிகளுடன் 62 ரன்கள் விளாசினார். குஷால் பெரேரா 22, குஷால் மெண்டிஸ் 14, துனித் வெல்லாலகே 15, கமிந்து மெண்டிஸ் 7, கேப்டன் தசன் ஷனகா 6 ரன்கள் சேர்த்தனர். இறுதிக்கட்ட ஓவர்களில் மட்டையை சுழற்றிய பவன் ரத்னாயகே 25 பந்துகளில், 2 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகளுடன் 44 ரன்கள் விளாசினார்.
அவரது அதிரடி காரணமாக இலங்கை அணியால் வலுவான இலக்கை கொடுக்க முடிந்தது. கடைசி 2 ஓவர்களில் மட்டும் பவன் ரத்னாயகே 30 ரன்களை விளாசியிருந்தார். ஜிம்பாப்வே அணி சார்பில் கிரேம் கிரீமர், பிராடு இவான்ஸ், பிளெசிங் முசாராபானி ஆகியோர் தலா 2 விக்கெட்கள் கைப்பற்றினர்.
179 ரன்கள் இலக்குடன் பேட் செய்த ஜிம்பாப்வே அணி ஒரு கட்டத்தில் 14 ஓவர்களில் 2 விக்கெட்கள் இழப்புக்கு 114 ரன்கள் எடுத்திருந்தது. தடிவனாஷே மருமணி 26 பந்துகளில், ஒரு சிக்ஸர், 5 பவுண்டரிகளுடன் 34 ரன்களும் ரியான் பரூல் 12 பந்துகளில், ஒரு சிக்ஸர், 2 பவுண்டரிகளுடன் 23 ரன்களும் சேர்த்து ஆட்டமிழந்தனர்.
ஜிம்பாப்வே அணியின் வெற்றிக்கு கடைசி 6 ஓவர்களில் 65 ரன்கள் தேவையாக இருந்தன. துஷான் ஹேமந்தா வீசிய 15-வது ஓவரில் ஜிம்பாப்வே அணியின் கேப்டன் சிகந்தர் ராசா கடைசி 3 பந்துகளில் 2 சிக்ஸர்கள், ஒரு பவுண்டரியை விரட்டினார். இந்த ஓவரில் 20 ரன்கள் சேர்க்கப்பட்டன. தீக்சனா வீசிய அடுத்த ஓவரில் சிகந்தர் ராசா தலா ஒரு பவுண்டரி, சிக்ஸரை விளாசினார்.
தில்ஷான் மதுஷங்கா வீசிய 17-வது ஓவரின் முதல் பந்தில் சிகந்தர் ராசா சிக்ஸர் விளாச, கடைசி பந்தை பிரையன் பென்னட் பவுண்டரிக்கு விரட்டினார். இந்த ஓவரில் 14 ரன்கள் சேர்க்கப்பட்டன. சிகந்தர் ராசாவின் அதிரடியால் ஆட்டம் ஜிம்பாப்வே அணியின் கட்டுக்குள் வந்தது. கடைசி 3 ஓவர்களில் வெற்றிக்கு 19 ரன்களே தேவை என்ற நிலை உருவானது.
சீராக ரன்கள் சேர்த்த பிரையன் பென்னட் 41 பந்துகளில், 6 பவுண்டரிகளுடன் அரை சதம் அடித்தார். துனித் வெல்லாலகே வீசிய 18 ஓவரில் 6 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்தார். துஷான் ஹேமந்தா வீசிய 19-வது ஓவரின் 2-வது பந்தில் சிகந்தர் ராசா, எக்ஸ்டிரா கவர் திசையில் நின்ற தசன் ஷனகாவிடம் பிடிகொடுத்து ஆட்டமிழந்தார்.
சிகந்தர் ராசா 26 பந்துகளில், 2 பவுண்டரிகள், 4 சிக்ஸர்களுடன் 45 ரன்கள் விளாசினார். இதையடுத்து களமிறங்கிய தஷிங்கா முசேகிவா ஒரு ரன் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். இந்த ஓவரில் 5 ரன்கள் மட்டுமே எடுக்கப்பட்டன. தீக்சனா வீசிய கடைசி ஓவரில் 8 ரன்கள் தேவையாக இருந்த நிலையில் முதல் பந்தை முன் யோங்கா சிக்ஸருக்கு விளாசி அசத்தினார்.
3-வது பந்தை பிரையன் பென்னட் பவுண்டரிக்கு விரட்ட ஜிம்பாப்வே அணி 19.3 ஓவர்களில் 4 விக்கெட்கள் இழப்புக்கு 182 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. பிரையன் பென்னட் 48 பந்துகளில், 8 பவுண்டரிகளுடன் 63 ரன்களும், முன்யோங்கா 3 பந்தில், 8 ரன்களும் சேர்த்தனர். 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ஜிம்பாப்வே அணிக்கு இது 3-வது வெற்றியாக அமைந்தது.
அந்த அணி லீக் சுற்றில் தோல்வியை சந்திக்காமல் சூப்பர் 8 சுற்று ஆட்டங்களை எதிர்கொள்கிறது. இலங்கை அணிக்கு இது முதல் தோல்வியாக அமைந்தது. சூப்பர் 8 சுற்றுக்கு அந்த அணி ஏற்கெனவே தகுதி பெற்றிருந்தது. இலங்கை அணி லீக் சுற்றை 3 வெற்றி, ஒரு தோல்வியுடன் நிறைவு செய்துள்ளது.
சூப்பர் 8 சுற்றில் ஜிம்பாப்வே அணி தனது முதல் ஆட்டத்தில் வரும் 23-ம் தேதி மேற்கு இந்தியத் தீவுகளுடன் மோதுகிறது. அதேவேளையில் இலங்கை அணி தனது முதல் ஆட்டத்தில் வரும் 22-ம் தேதி இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்துகிறது.














