ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெற்று வருகிறது. 20 அணிகள் கலந்துகொண்டுள்ள இந்தத் தொடரின் லீக் ஆட்டங்கள் இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது. லீக் ஆட்டங்களின் அடிப்படையில் ‘ஏ’ பிரிவில் இருந்து இந்தியா சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது.
மற்றொரு அணியாக பாகிஸ்தான் அல்லது அமெரிக்கா முன்னேறக்கூடும். ‘பி’ பிரிவில் இருந்து இலங்கை, ஜிம்பாப்வே அணிகளும், ‘சி’ பிரிவில் இருந்து மேற்கு இந்தியத் தீவுகள், இங்கிலாந்து அணிகளும், ‘டி’ பிரிவில் இருந்து தென் ஆப்பிரிக்கா, நியூஸிலாந்து அணிகளும் சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறி உள்ளன.
சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறி உள்ள அணிகள் 2 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. இதில் குரூப் 1-ல் இந்தியா, தென் ஆப்பிரிக்கா, மேற்கு இந்தியத் தீவுகள், ஜிம்பாப்வே அணிகள் இடம் பெற்றுள்ளன. குரூப் 2-ல் இலங்கை, இங்கிலாந்து, நியூஸிலாந்து அணிகள் இடம் பெற்றுள்ளன. இந்த பிரிவில் கடைசி அணியாக பாகிஸ்தான் அல்லது அமெரிக்கா இடம் பெறும்.
சூப்பர் 8 சுற்றில் ஒவ்வொரு பிரிவிலும் இடம் பெற்றுள்ள அணி தனது பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோதும். புள்ளிகள் அடிப்படையில் இரு பிரிவிலும் முதல் இரு இடங்களை பிடிக்கும் தலா 2 அணிகள் அரை இறுதிக்கு முன்னேறும்.
சூப்பர் 8 சுற்றில் குரூப் 1 ஆட்டங்கள் இந்தியாவிலும், குரூப் 2 ஆட்டங்கள் இலங்கையிலும் நடைபெறுகின்றன. சூப்பர் 8 சுற்றில் இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் வரும் 22-ம் தேதி தென் ஆப்பிரிக்காவுடன் மோதுகிறது. இந்த ஆட்டம் அகமதாபாத்தில் நடைபெறுகிறது.
இதைத் தொடர்ந்து சென்னை சேப்பாக்கத்தில் 26-ம் தேதி நடைபெறும் ஆட்டத்தில் ஜிம்பாப்வே உடனும், மார்ச் 1-ம் தேதி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெறும் ஆட்டத்தில் மேற்கு இந்தியத் தீவுகள் அணியுடனும் இந்திய அணி பலப்பரீட்சை நடத்த உள்ளது.














