பிக் பாஷ் டி20 கிரிக்கெட் லீக் போட்டியின் ஒரு ஆட்டத்தை சென்னையில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாகத் தெரியவந்துள்ளது. இதுதொடர்பாக கிரிக்கெட் ஆஸ்திரேலியா (சிஏ) அமைப்புடன், தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் (டிஎன்சிஏ) ஆலோசனை நடத்தியுள்ளது.
ஐபிஎல் போட்டியைப் போல பிக் பாஷ் லீக் (பிபிஎல்) போட்டி, ஆஸ்திரேலியாவில் நடத்தப்பட்டு வரும் பிரபலமான டி20 கிரிக்கெட் தொடராகும். இந்நிலையில் பிபிஎல் போட்டியை மேலும் பிரபலப்படுத்தும் விதமாக அடுத்த சீசனின் ஒரு ஆட்டத்தை மட்டும் சென்னையில் நடத்துவது தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட்டுள்ளது. இதை டிஎன்சிஏ மூத்த நிர்வாகி ஒருவர் உறுதிப்படுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் கூறும்போது, “கிரிக்கெட் ஆஸ்திரேலியா அமைப்பைச் சேர்ந்த நிர்வாகிகள் பில் ரிக்பி, மார்கட் ஹார்லி ஆகியோர் ஒரு ஆட்டத்தை சென்னையில் நடத்துவது தொடர்பாக டிஎன்சிஏ நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தியுள்ளனர். சென்னையில் போட்டியை நடத்தும் திட்டம் இன்னும் ஆரம்பக் கட்ட நிலையிலேயே உள்ளது.
ஆஸ்திரேலியாவை விட்டு ஒரு போட்டியை வெளிநாட்டில் நடத்தி பிரபலப்படுத்துவதற்காக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. சென்னை எம்.ஏ.சிதம்பரம் மைதானம் குறித்து நல்ல விஷயங்களை கேட்டறிந்து இந்த முடிவை சிஏ எடுத்துள்ளது. இந்த விஷயத்தில் டிஎன்சிஏ தன்னிச்சையாக முடிவெடுக்க முடியாது. பிசிசிஐ உத்தரவு வந்த பின்னரே நாங்கள் முடிவெடுக்க முடியும்” என்றார்.














