ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்று டெல்லி அருண் ஜேட்லி மைதானத்தில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் ‘டி’ பிரிவில் உள்ள ஆப்கானிஸ்தான் – ஐக்கிய அரபு அமீரகம் அணிகள் மோதின.
முதலில் பேட் செய்த ஐக்கிய அரபு அமீரகம் 9 விக்கெட்கள் இழப்புக்கு 160 ரன்கள் குவித்தது. தொடக்க வீரர்களான ஆர்யன்ஷ் சர்மா 0 ரன்களில் அஸ்மதுல்லா ஓமர்ஸாய் பந்திலும், கேப்டன் முகமது வசீம் 10 ரன்களில் முஜீப் உர் ரஹ்மான் பந்திலும் நடையை கட்டினர்.
3-வது விக்கெட்டுக்கு இணைந்த அலிஷான் ஷராஃபு, சோஹைப் கான் ஜோடி சீரராக ரன்கள் சேர்த்தது. 84 ரன்கள் சேர்த்த இந்த ஜோடியை முஜீப் உர் ரஹ்மான் பிரித்தார். அலிஷான் ஷராஃபு 31 பந்துகளில், 2 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகளுடன் 40 ரன்கள் எடுத்த நிலையில் முஜீப் உர் ரஹ்மான் பந்தில் ஆட்டமிழந்தார். அப்போது ஐக்கிய அரபு அமீரகம் 11.2 ஓவர்களில் 97 ரன்கள் எடுத்திருந்தது.
இதன் பின்னர் அந்த அணி ஆட்டம் கண்டது. சையது ஹைதர் 13, ஹர்ஷித் கவுசிக் 0 ரன்களில் அஸ்மதுல்லா ஓமர்ஸாய் பந்தில் வெளியேறினர். முகமது அர்ஃபான் ரன் ஏதும் எடுக்காத நிலையில் ரஷித் கான் பந்தில் ‘ஹிட்விக்கெட்’ முறையில் ஆட்டமிழந்தார்.
தனது 2-வது அரை சதத்தை கடந்த சோஹைப் கான் 48 பந்துகளில், 4 சிக்ஸர்கள், 6 பவுண்டரிகளுடன் 68 ரன்கள் எடுத்த நிலையில் அஸ்மதுல்லா ஓமர்ஸாய் பந்தில் வெளியேறினார். இதைத் தொடர்ந்து ஹைதர் அலி 13, ஜூனைத் சித்திக் 3 ரன்களில் ரன் அவுட் ஆனார்கள். ஆப்கானிஸ்தான் அணி தரப்பில் அஸ்மதுல்லா ஓமர்ஸாய் 4 ஓவர்களை வீசி 15 ரன்களை விட்டுக்கொடுத்து 4 விக்கெட்களை வீழ்த்தினார். முஜீப் உர் ரஹ்மான் 2, ரஷித் கான் ஒரு விக்கெட் கைப்பற்றினர்.
161 ரன்கள் இலக்குடன் பேட் செய்த செய்த ஆப்கானிஸ்தான் 19.2 ஓவர்களில் 5 விக்கெட்கள் இழப்புக்கு 162 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இப்ராகிம்ஸத்ரன் 41 பந்துகளில், ஒரு சிக்ஸர், 6 பவுண்டரிகளுடன் 53 ரன்களும், டார்விஷ் ரசூலி 23 பந்துகளில், ஒரு சிக்ஸர், 3 பவுண்டரிகளுடன் 33 ரன்களும், அஸ்மதுல்லா ஓமர்ஸாய் 21 பந்துகளில், 3 சிக்ஸர்கள், 2 பவுண்டரிகளுடன் 40 ரன்களும் விளாசி அணியின் வெற்றியில் முக்கிய பங்கு வகித்தனர்.
முன்னதாக ரஹ்மனுமல்லா குர்பாஸ் 0, குல்பாதின் நயீப் 13, செதிகுல்லா அடல் 16 ரன்களில் நடையை கட்டினர். ஆட்ட நாயகனாக அஸ்மதுல்லா ஓமர்ஸாய் தேர்வானார். 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ஆப்கானிஸ்தான் அணிக்கு இது முதல் வெற்றியாக அமைந்தது. அந்த அணி தனது முதல் ஆட்டத்தில் நியூஸிலாந்திடமும், 2-வது ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்காவிடமும் தோல்வி கண்டிருந்தது.
தற்போதைய வெற்றியின் மூலம் சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை நூலிழையில் தக்கவைத்துக் கொண்டுள்ள ஆப்கானிஸ்தான் அணி 2 புள்ளிகளுடன் தனது பிரிவில் 3-வது இடத்தில் உள்ளது. தனது கடைசி லீக் ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் அணி வரும் 19-ம் தேதி கனடாவுடன் மோதுகிறது.
ரஷித் கான் 700 விக்கெட்கள்
ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்று ஐக்கிய அரபு அமீரக அணிக்கு எதிரான ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் அணி 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் அணியின் கேப்டனான ரஷித் கான், ஒரு விக்கெட் கைப்பற்றினார். ஆட்டத்தின் 16-வது ஓவரை ரஷித் கான் வீசிய போது அவரது பந்தில் முகமது அர்ஃபான் ‘ஹிட்விக்கெட்’ முறையில் ஆட்டமிழந்தார்.
டி 20 கிரிக்கெட் அரங்கில் ரஷித் கான் கைப்பற்றிய 700-வது விக்கெட்டாக இது அமைந்தது. இதன் மூலம் தொழில்முறை கிரிக்கெட், சர்வதேச கிரிக்கெட் என அனைத்து விதமான டி 20 போட்டிகளிலும் 700 விக்கெட்களை வீழ்த்திய முதல் வீரர் என்ற சாதனையை ரஷித் கான் படைத்தார். இந்த வகையில் மேற்கு இந்தியத் தீவுகளின் டுவைன் பிராவோ (631) 2-வது இடத்திலும், சுனில் நரைன் (613) 3-வது இடத்திலும் உள்ளனர்.
சூப்பர் 8-ல் தென் ஆப்பிரிக்கா
ஐசிசி டி 20 உலகக் கோப்பை தொடரில் நேற்று ‘டி’ பிரிவில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் அணி 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் ஐக்கிய அரபு அமீரகத்தை தோற்கடித்தது.
இந்த ஆட்டத்தின் முடிவு காரணமாக இதே பிரிவில் ஹாட்ரிக் வெற்றிகளுடன் 6 புள்ளிகள் பெற்று முதலிடத்தில் இருந்த தென் ஆப்பிரிக்க அணி சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறியது. அந்த அணியின் நிகர ரன்விகிதம் 1.477 ஆக இருக்கிறது.














