ஐசிசி டி 20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்று கொழும்பு நகரில் உள்ள ஆர்.பிரேமதாசா மைதானத்தில் ‘ஏ’ பிரிவில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோதின. மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணியின் கேப்டன் சல்மான் அலி ஆகா பீல்டிங்கை தேர்வு செய்தார்.
பேட்டிங்கை தொடங்கிய இந்திய அணிக்கு தொடக்கமே அதிர்ச்சியாக இருந்தது. சல்மான் அலி ஆகா வீசிய முதல் ஓவரில் 4 பந்துகளை சந்தித்த அபிஷேக் சர்மா ரன் ஏதும் எடுக்காத நிலையில் மிட் ஆன் திசையில் ஷாகின் ஷா அப்ரிடியிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.
இதையடுத்து களமிறங்கிய திலக் வர்மா நிதானமாக விளையாடினார். ஷாகின் ஷா அப்ரிடி வீசிய 2-வது ஓவரில் ஒரு சிக்ஸர், 2 பவுண்டரிகளை விரட்டினார். இந்த ஓவரில் 15 ரன்கள் சேர்க்கப்பட்டன. சல்மான் அலி ஆகா வீசிய அடுத்த ஓவரில் இஷான் கிஷன் ஒரு பவுண்டரி விரட்ட இந்த ஓவரில் 9 ரன்கள் சேர்க்கப்பட்டன. சைம் அயூப் வீசிய 4-வது ஓவரில் 5 ரன்களை மட்டும் விட்டுக்கொடுத்தார்.
அப்ரார் அகமது வீசிய 5-வது ஓவரில் இஷான் கிஷன் ஒரு பவுண்டரி விரட்ட இந்த ஓவரில் 11 ரன்கள் எடுக்கப்பட்டன. அடுத்த ஓவரில் இஷான் கிஷன் 2 பவுண்டரிகள் அடிக்க பவர்பிளே முடிவில் இந்திய அணி 52 ரன்கள் சேர்த்தது. அப்ரார் அகமது வீசிய 7-வது ஓவரில் இஷான் கிஷன் 3 பவுண்டரிகளை விரட்டினார். மட்டையை சுழற்றிய இஷான் கிஷன் 27 பந்துகளில் அரை சதம் விளாசினார்.
ஷதப் கான் வீசிய 8-வது ஓவரில் தலா ஒரு சிக்ஸர், பவுண்டரியை விளாசி அசத்தினார் இஷான் கிஷன். இந்த ஓவரில் 17 ரன்கள் குவிக்கப்பட்டன. அதிரடியாக விளையாடிய இஷான் கிஷன் 40 பந்துகளில், 3 சிக்ஸர்கள், 10 பவுண்டரிகளுடன் 77 ரன்கள் எடுத்த நிலையில் சைம்அயூப் பந்தில் போல்டானார்.
2-வது விக்கெட்டுக்கு இஷான் கிஷன், திலக் வர்மா ஜோடி 7.4 ஓவர்களில் 87 ரன்கள் குவித்தது. இதையடுத்து களமிறங்கிய கேப்டன் சூர்யகுமார் யாதவ் வழக்கத்துக்கு மாறாக மிகவும் நிதானமாக பேட் செய்தார். இந்திய அணி 11.1 ஓவர்களில் 100 ரன்களை எட்டியது. மறுமுனையில் பொறுமையாக விளையாடி வந்த திலக் வர்மா 24 பந்துகளில், ஒரு சிக்ஸர், 2 பவுண்டரிகளுடன் 25 ரன்கள் எடுத்த நிலையில் சைம் அயூப் பந்தில் எல்பிடபிள்யூ ஆனார்.
3-வது விக்கெட்டுக்கு சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா ஜோடி 38 ரன்கள் சேர்த்தது. இதையடுத்து களமிறங்கிய ஹர்திக் பாண்டியா (0) தான் சந்தித்த முதல் பந்தை சிக்ஸருக்கு விளாச முயன்ற போது லாங் ஆஃப் திசையில் பாபர் அஸமிடம் கேட்ச் ஆனது. சைம் அயூப் அடுத்தடுத்து கைப்பற்றிய இந்த 2 விக்கெட்களால் இந்திய அணிக்கு அழுத்தம் உருவானது.
அப்போது இந்திய அணி 15 ஓவர்களில் 4 விக்கெட்கள் இழப்புக்கு 127 ரன்கள் எடுத்திருந்தது. இதைத் தொடர்ந்து களமிறங்கிய ஷிவம் துபே அதிரடியாக விளையாட முயன்றார். நவாஷ் அகமது வீசிய 16-வது ஓவரில் ஷிவம் துபே ஒரு பவுண்டரி அடிக்க இந்த ஓவரில் 9 ரன்கள் சேர்க்கப்பட்டது. உஸ்மான் தாரிக் வீசிய அடுத்த ஓவரில் 4 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்தார்.
அப்ரார் அகமது வீசிய 18-வது ஓவரில் சூர்யகுமார் யாதவ் பவுண்டரி அடிக்க, ஷிவம் துபே சிக்ஸர் விளாசி அசத்தினார். இந்த ஓவரில் 14 ரன்கள் சேர்க்கப்பட்டன. நிதானமாக விளையாடி வந்த சூர்யகுமார் யாதவ் உஸ்மான் தாரிக் பந்தை டீப் மிட்விக்கெட் திசையில் சிக்ஸருக்கு விளாச முயன்ற போது எல்லைக்கோட்டுக்கு அருகே சைம் அயூப்பிடம் கேட்ச் ஆனது. 29 பந்துகளை சந்தித்த சூர்யகுமார் யாதவ் 3 பவுண்டரிகளுடன் 32 ரன்கள் சேர்த்தார்.
அப்போது ஸ்கோர் 18.5 ஓவர்ளில் 159 ஆக இருந்தது. ஷாகின் ஷா அப்ரிடி வீசிய கடைசி ஓவரின் முதல் பந்தை ஷிவம் துபே பவுண்டரிக்கு விரட்டினார். இதே ஓவரின் 3-வது பந்தில் பவுண்டரி அடித்த ரிங்கு சிங், அடுத்த பந்தை டீப் மிட்விக்கெட் திசையில் சிக்ஸருக்கு பறக்கவிட்டார். அடுத்த பந்தில் 2 ரன்கள் சேர்க்க முயன்ற போது ஷிவம் துபே ரன் அவுட் ஆனார்.
ஷிவம் துபே 17 பந்துகளில், ஒரு சிக்ஸர், 3 பவுண்டரிகளுடன் 27 ரன்கள் சேர்த்தார். ஆட்டத்தின் கடைசி பந்தில் அக்சர் படேல் ரன் ஏதும் எடுக்காத நிலையில் ஆட்டமிழந்தார். 20 ஓவர்களின் முடிவில் இந்திய அணி 7 விக்கெட்கள் இழப்புக்கு 175 ரன்கள் எடுத்தது. ரிங்கு சிங் 4 பந்துகளில், ஒரு சிக்ஸர், ஒரு பவுண்டரியுடன் 11 ரன்கள் சேர்த்தார். பாகிஸ்தான் அணி தரப்பில் சைம் அயூப் 3 விக்கெட்களை வீழ்த்தினார். சல்மான் அலி ஆகா, ஷாகின் ஷா அப்ரிடி, உஸ்மான் தாரிக் ஆகியோர் தலா ஒரு விக்கெட் கைப்பற்றினர்.
176 ரன்கள் இலக்குடன் பேட் செய்த பாகிஸ்தான் அணி இந்திய அணியின் பந்துவீச்சில் தொடக்கத்திலேயே ஆட்டம் கண்டது. சாகிப்சாதா 0 ரன்னில் ஹர்திக் பாண்டியா பந்தில் நடையை கட்டினார். ஜஸ்பிரீத் பும்ரா வீசிய அடுத்த ஓவரில் சைம் அயூப் 6, சல்மான் அலி ஆகா 4 ரன்களில் வெளியேறினர். 13 ரன்களுக்கு 3 விக்கெட்களை பறிகொடுத்த பாகிஸ்தான் அணியால் அதன் பின்னர் மீள முடியவில்லை.
பாபர் அஸம் 5 ரன்களில் அக்சர் படேல் பந்தில் போல்டானார். சற்று தாக்குப்பிடித்து அதிரடியாக விளையாட முயன்ற உஸ்மான் கான் 34 பந்துகளில், ஒரு சிக்ஸர், 6 பவுண்டரிகளுடன் 44 ரன்கள் எடுத்த நிலையில் அக்சர் படேல் பந்தில் ஸ்டெம்பிங்க் ஆனார்.
இதைத் தொடர்ந்து முகமது நவாஷ் 4 ரன்களில் குல்தீப் யாதவ் பந்தில் வெளியேறினார். இதன் பின்னர் ஷதப் கான் 14 ரன்களில் திலக் வர்மா பந்தில் ஆட்டமிழந்தார். வருண் சக்ரவர்த்தி வீசிய 16-வது ஓவரில் ஃபஹீம் அஷ்ஃரப் (10), அப்ரார் அகமது (0) ஆகியோர் அடுத்தடுத்த பந்தில் ஆட்டமிழந்தனர். கடைசி வீரராக உஸ்மான் தாரிக் ரன் ஏதும் எடுக்காத நிலையில் ஹர்திக் பாண்டியா பந்தில் போல்டானார். முடிவில் பாகிஸ்தான் அணி 18 ஓவர்களில் 114 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. ஷாகின் ஷா அப்ரிடி 19 பந்துகளில், ஒரு சிக்ஸர், 2 பவுண்டரிகளுடன் 23 ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
இந்திய அணி தரப்பில் ஜஸ்பிரீத் பும்ரா, ஹர்திக் பாண்டியா, அக்சர் படேல், வருண் சக்ரவர்த்தி ஆகியோர் தலா 2 விக்கெட்களை வீழ்த்தினர். குல்தீப் யாதவ், திலக் வர்மா ஆகியோர் தலா ஒரு விக்கெட் கைப்பற்றினர். 61 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய அணிக்கு இது ஹாட்ரிக் வெற்றியாக அமைந்தது. இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி தனது பிரிவில் 6 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்து சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறியது.
அதேவேளையில் பாகிஸ்தான் அணிக்கு இது நடப்பு தொடரில் முதல் தோல்வியாக அமைந்ததது. 3 ஆட்டங்களில் விளையாடி உள்ள அந்த அணி 2 வெற்றி, ஒரு தோல்வியுடன் 4 புள்ளிகள் பெற்று -0.403 நிகர ரன் விகிதத்துடன் புள்ளிகள் பட்டியலில் 3-வது இடத்தில் உள்ளது. அந்த அணி சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேற வேண்டுமானால் தனது கடைசி ஆட்டத்தில் நமீபியாவை வீழ்த்த வேண்டும். இந்த ஆட்டம் வரும் 18-ம் தேதி கொழும்பு நகரில் நடைபெறுகிறது.
இதுவே அதிகபட்சம்: ஐசிசி டி 20 உலகக் கோப்பை தொடரில் நேற்று கொழும்பு நகரில் நடைபெற்ற பாகிஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணி 175 ரன்கள் குவித்தது. டி 20 உலகக் கோப்பை வரலாற்றில் பாகிஸ்தான் அணிக்கு எதிராக இந்திய அணியின் அதிகபட்ச ரன்குவிப்பாக இது அமைந்தது. இதற்கு முன்னர் 2022-ம் ஆண்டு உலகக் கோப்பை தொடரில் 160 ரன்களை இந்திய அணி எடுத்திருந்தது













