கடந்த 2016ம் ஆண்டிலேயே பல மருத்துவர்கள் இணைந்து அன்சார் இன்டரிம் என்ற தீவிரவாத அமைப்பை உருவாக்கியது என்ஐஏ விசாரணையில் தெரியவந்துள்ளது.
கடந்த ஆண்டு நவம்பர் 10ம் தேதி டெல்லி செங்கோட்டை அருகே கார் குண்டு வெடித்தது. இதில் 13 பேர் உயிரிழந்தனர். இது தொடர்பாக தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) விசாரணை நடத்தி வருகிறது. அந்தக் காரில் இருந்த மருத்துவர் உமர் இந்த தாக்குதலை நடத்தியது விசாரணையில் தெரிய வந்தது. மேலும் இதில் ஹரியானாவில் உள்ள அல் பலா பல்கலைக்கழக மருத்துவர்கள் பலருக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்தது. கைதான மருத்துவர்கள் 2016ம் ஆண்டே தீவிரவாதப் பாதைக்குத் திரும்பியுள்ளனர்.
ஏப்ரல் 2022-ல் ஸ்ரீநகரில் உள்ள ஈத்கா பகுதியில் ஒரு ரகசியக் கூட்டத்தை நடத்திய இவர்கள், ‘அன்சார் இன்டரிம்’ என்ற புதிய அமைப்பைத் தொடங்கியுள்ளனர். இந்த அமைப்புக்கு அதீல் ரத்தர் தலைவராகவும், மத போதகர் மவுல்வி இர்பான் துணைத் தலைவராகவும் செயல்பட்டுள்ளனர்.
இந்தக் கும்பலின் முக்கிய செயல்பாட்டாளராக இருந்தவர் 28 வயது மருத்துவர் உமர். ஹரியானாவின் பரிதாபாத் போன்ற பகுதிகளில் இருந்து வேதிப் பொருட்களைச் சேகரித்து, டெல்லியில் மக்கள் நெருக்கடி மிகுந்த இடங்கள், வழிபாட்டுத் தலங்களில் வாகன வெடிகுண்டு தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளனர்.
ஸ்ரீநகர் போலீஸார் இந்தக் கும்பலைச் சேர்ந்த சிலரைக் கைது செய்து வெடி பொருட்களைப் பறிமுதல் செய்தவுடன், உமர் பீதியடைந்துள்ளார். இதனால் திட்டமிட்ட காலத்துக்கு முன்பே நவம்பர் 10ம் தேதி செங்கோட்டைக்கு வெளியே குண்டுவெடிப்பை நிகழ்த்தியுள்ளார். இதில் உமரும் உயிரிழந்தார்.













