மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவை காங்கிரஸ் எம்.பி.க்கள் திட்டியதாக நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு கூறினார்.
மக்களவையில் கடந்த 2ம் தேதி, முன்னாள் ராணுவத் தளபதி எம்.எம்.நரவனேவின் வெளியிடப்படாத நூலின் பகுதிகளை அடிப்படையாக கொண்ட ஒரு கட்டுரை பற்றி பேச காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு சபாநாயகர் அனுமதி மறுத்தார். அப்போது முதல், மக்களவையில் அமளி ஏற்பட்டு வருகிறது.
எதிர்க்கட்சிகளின் அமளி காரணமாக பிப்ரவரி 4ம் தேதி, குடியரசுத தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்திற்கு பிரதமர் நரேந்திர மோடியால் பதில் அளிக்க முடியவில்லை. பிப்ரவரி 5ம் தேதி பிரதமரின் வழக்கமான உரை இல்லாமல் நன்றி தெரிவிக்கும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்நிலையில் நாடாளுமன்ற வளாகத்தில் அமைச்சர் கிரண் ரிஜிஜு நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: சபாநாயகர் அறைக்குள் காங்கிரஸ் எம்.பி.க்கள் 20- 25 பேர் சென்றபோது நானும் சென்றேன். அவர்கள் சபாநாயகரை திட்டினர். அவர்கள் பயன்படுத்திய வார்த்தைகளை என்னால் சொல்ல முடியாது. அப்போது கே.சி. வேணுகோபால், பிரியங்கா காந்தி போன்ற காங்கிரஸ் மூத்த தலைவர்கள் இருந்தனர். அவர்கள் அதை தடுக்கவில்லை. மாறாக ஊக்கப்படுத்தினர்.
சபாநாயகர் மிகவும் மென்மையானவர். இல்லையெனில் அவர் கடுமையான நடவடிக்கை எடுத்திருக்கலாம். சபாநாயகரின் உத்தரவை ராகுல் பின்பற்றுவதில்லை. சபாநாயகர் அனுமதி வழங்காவிட்டால், எந்த உறுப்பினரும் பேச முடியாது. பிரதமர் கூட சபாநாயகரின் அனுமதியுடன் பேசுகிறார். எல்லாவற்றையும் பொதுவில் விவாதிக்க வேண்டும் என்றால், நாட்டின் பாதுகாப்பை எவ்வாறு பராமரிக்க முடியும் ?
நாட்டின் பாதுகாப்பு விஷயங்களில் ஒரு குழந்தையைப் போல நடந்து கொள்ளக்கூடாது. அரசியல் லாபத்துக்காக ஒருவரின் கண்ணியத்தை குறைப்பது சரியல்ல. ராகுல் காந்தி அம்பலப்படுத்தப்பட்டார். அவர் அம்பலப்படுத்தப் பட்ட பிறகு நான் எந்தக் கருத்தையும் கூறத் தேவையில்லை. இவ்வாறு அவர் கூறினார்.



