பிரபல இந்தி நடிகர் மனோஜ் பாஜ்பாய் ‘த பேமிலி மேன்’ வெப் தொடர் மூலம் பிரபலமானார். தமிழில் சூர்யாவின் ‘அஞ்சான்’ படத்தில் வில்லனாக நடித்திருந்தார். அவர் ஊழல் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ள இந்திப் படம் ‘கூஷ்கோர் பண்டட்.
இதை, ‘எ வெனஸ்டே’, ‘ஸ்பெஷல் 26’, ‘எம்.எஸ்.தோனி: த அன்டோல்டு ஸ்டோரி’ உள்பட பல படங்களை இயக்கிய நீரஜ் பாண்டே தயாரித்துள்ளார். ரிதேஷ் ஷா இயக்கியுள்ளார். நெட்பிளிக்ஸ் தளத்தில் வெளியாக இருக்கும் இப்படத்தின் தலைப்புக்குப் பிராமண சமூகத்தினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
பிராமணர்களைக் குறிக்கும் வார்த்தையான பண்டிட்டின் பேச்சு வழக்கான ‘பண்டட்’ உடன் ‘கூஷ்கோர்’ (ஊழல்) என்ற வார்த்தையை இணைத்து பிராமண சமூகத்தை அவதூறு செய்துள்ளதாக அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இத்திரைப்படக் குழுவினர் மீது வழக்குப்பதிவு செய்ய உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டதை அடுத்து, வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இப்படத்தின் சர்ச்சைக்குரிய தலைப்புக்கு எதிராக, வட மாநிலங்களில் போராட்டங்கள் நடைபெற்றன. உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் தயாரிப்பாளர் நீரஜ் பாண்டே, இயக்குநர் ரித்தேஷ் ஷா, மனோஜ் பாஜ்பாய் ஆகியோரின் உருவப் பொம்மைகள் எரிக்கப்பட்டன.
இந்நிலையில், மேற்கிந்தியத் திரைப்பட ஊழியர்கள் கூட்டமைப்பு (FWICE), இப்படத்தின் தலைப்பு குறிப்பிட்ட சமூகத்தை இழிவுபடுத்தும் விதத்தில் இருக்கிறது என்றும் அத்தலைப்பை நீக்க வேண்டும் என்றும் படக்குழுவைக் கேட்டுக் கொண்டுள்ளது.
ஒவ்வொரு தொழிலும் மரியாதை மற்றும் கண்ணியத்துக்குத் தகுதியானது. திரைப்படத் துறை, கருத்துச் சுதந்திரத்துக்கான ஓர் ஊடகமாக இருப்பதைத் தவிர, சமூகப் பொறுப்பையும் கொண்டுள்ளது. அதனால் அத்தலைப்பை உடனடியாக நீக்க வேண்டும். இல்லை என்றால் தொழில்ரீதியான ஒத்துழைப்பை வழங்க மாட்டோம் என்றும் எச்சரித்துள்ளது.



