கேப்டன் விஜயகாந்த் என் அம்மா போன்றவர் என்றும் அவரை சந்தித்தது பற்றியும் கடந்த வாரம் கூறியிருந்தேன். ஷூட்டிங் வந்தால் அவர் சேரில் உட்காரமாட்டார். ஸ்டூலில்தான் நிமிர்ந்து அமர்வார். மற்றவர்களுக்கு சாப்பாடு போட்டு அழகு பார்ப்பதில் அவருக்கு அலாதி ஆனந்தம். அவருடன் அப்போது, நெறஞ்ச மனசு, தர்மபுரி, எங்கள் அண்ணா ஆகிய படங்களில் நடித்திருக்கிறேன்.
படப்பிடிப்பில் நான் எங்காவது தூரத்தில் இருந்தால், “ஏய் பாஸ்கர், அங்க என்ன பண்ற? இங்க வா” என்பார். அழைத்து அவர் அருகில் உட்கார வைத்துக் கொள்வார். வெளியூர்களில் நடக்கும் படப்பிடிப்புகளில் அவருடைய ரசிகர்கள், அன்பர்கள் தங்கள் வீட்டிலிருந்து சாப்பாடு கொண்டு வந்து கொடுப்பார்கள். அவர் அதை அருகில் உள்ள எல்லோருக்கும் பிரித்துக் கொடுப்பார்.
படப்பிடிப்பில் சாப்பாடு, கல்யாண பந்தி மாதிரி நடக்கும். நடிகர்களுக்கு என்று தனியாக கிடையாது. எல்லோரும் ஒன்றுதான் என்பது அவர் எண்ணம். அவருக்கு என்ன வகை சாப்பாடு வருமோ, அதுபோலத்தான் மற்றவர்களுக்கும் கொடுக்க வேண்டும் என்று சொல்வார். படப்பிடிப்புக்கு வேடிக்கை பார்க்க வந்திருப்பவர்களையும் சாப்பிடச் சொல்வார். அப்படி ஒரு தங்கமான குணம்.
எனக்கு எப்போதும் எவ்வளவு தேவையோ, அந்தளவு மட்டுமே வாங்கி சாப்பிடுவது வழக்கம். அதை மீறி உணவை வீணாக்கவும் மாட்டேன். அது எனக்குப் பிடிக்காத ஒன்று. ஆனால், விஜயகாந்த் அண்ணன் அருகில் உட்கார்ந்தால், அது நடக்காது. அவர் அன்பால் என் சாப்பாட்டு அளவு கூடி விடும்.
வாழை இலை விரித்திருப்பார்கள். அதன் முன் அமர்வேன். ஒரு பெரிய கரண்டியில் மட்டன் வைக்கச் சொல்வார். அடுத்து சிக்கன் வைக்கச் சொல்வார். “இப்படி வச்சா எப்படி சாப்பிடறது?” என்று கேட்டால், “இங்க பாரு பாஸ்கரு கோபப்படறாப்ல, இன்னொரு கரண்டி சிக்கனை வையி” என்பார்.
“இலை பாதி மூடிருச்சே, எப்படிண்ணே சாப்பிட?” என்று கேட்டால், “சிக்கனுக்கும் மட்டனுக்கும் இடையில சாதம் வையுங்க” என்பார். பேன்ட் பட்டனை அவிழ்த்து விட்டுக்கொண்டு சாப்பிடுவேன். “சாப்பிட முடியலை” என்று சொன்னால் அதை ரசித்துக்கொண்டே, “பொறுமையா, மெதுவா சாப்பிடு, இப்ப என்ன அவசரம்?” என்பார்.
வயிறு வீங்கிவிடும். சாப்பிட்டு எழுந்தால் கண்ணை இறுக்கிக் கொண்டு தூக்கம் வரும். அப்போது, குறைந்தது அரை லிட்டர் அளவு பாயசத்தைக் கொண்டு வந்து, அண்ணன் கொடுக்கச் சொன்னார் என்று நீட்டுவார்கள். “வயிறு முட்டிருச்சி, இதுக்கு மேல இடமில்லை” என்று சொன்னால், “நீங்க குடிக்கலைன்னா, அண்ணன் எங்களை திட்டுவாரு” என்று சொல்லிக் குடிக்கச் சொல்வார்கள். திக்குமுக்காட வைக்கும் அன்பு என்பார்களே, அதை அவரிடம்தான் பார்க்க முடியும்.
“இவ்வளவு சாப்பிட்ட பிறகு, மதியம் ரெண்டு மணி ஷாட்டுக்கு எப்படி வர முடியும்?” என்று கேட்டால், இயக்குநரை அழைத்து “பாஸ்கரு நல்லா சாப்பிட்டுட்டான். ஒரு நாலு மணிக்கு ஷாட்டுக்கு வரச் சொல்லலாமா?” என்று கேட்பார். சரி என்பார் அவர். பிறகு எங்காவது மரத்தடியில் போய் துணியை விரித்து படுத்துவிடுவேன்.
மரத்தடியில் காற்று நன்றாக வரும் என்பதால் நிம்மதியாக தூங்க ஆரம்பிப்பேன். அப்போது சின்ன சின்ன கற்களை எடுத்து என் மீது வீசிவிட்டு, ஒன்றும் தெரியாத மாதிரி திரும்பிக்கொள்வார். அது அவர் வேலைதான் என்பது தெரியும். ஆனால், நானும் தெரியாதது போல, “யாருங்க கல்லை எறியறது?” என்று சும்மா சொல்லிவிட்டு படுப்பேன். மீண்டும் கல் வரும்.
இப்படியொரு குழந்தை மனது அவருக்கு. பிறகு நான்கு மணிக்கு எழுந்து முகத்தைக் கழுவிவிட்டு ஸ்பாட்டுக்கு வந்தால் முகம் நன்றாக வீங்கியிருக்கும். பார்த்து ரசித்து சிரிப்பார். தர்மபுரி படப்பிடிப்பில் இருந்தபோது எனக்கு ஐம்பதாவது பிறந்த நாள். அதை நான் யாரிடமும் சொல்லவில்லை.
அங்கிருந்த உதவி இயக்குநர் ஒருவருக்கு அது எப்படியோ தெரிந்திருக்கிறது. தகவல், கேப்டனுக்கு சென்றதும் என்னை அழைத்தார். ஒரு சால்வையை போர்த்தி, பொக்கே கொடுத்து என்னைக் கட்டிப்பிடித்து புகைப்படம் எடுக்க சொன்னார். அவர் நிஜமாகவே ‘நெறஞ்ச மனசுக்காரர்’தான்.
அவருடைய ‘எங்கள் அண்ணா’ படத்தில் நான் குடிகாரர் கேரக்டரில் நடித்தேன். என் நடிப்பை அப்படி ரசித்தார். “தத்ரூபமா அப்படியே ஒரு குடிகாரனை உரிச்சி வச்சிருக்கே பாஸ்கர். இப்படி பல குடிகாரர்களை ரோட்டுல பார்த்திருக்கேன்” என்றார். எனக்கான பொழுதுபோக்குகளில் எங்காவது சாலையின் ஓரத்தில் காரை நிறுத்திவிட்டு, மனிதர்களின் உடல் மொழியை ரசிப்பது உண்டு.
பலமுறை டாஸ்மாக் கடைகளின் முன்னால் ஓரமாக காருக்குள் அமர்ந்து மதுகுடித்து விட்டு தள்ளாடியபடி வருபவர்களின் உடல் மொழியை கவனித்திருக்கிறேன். சிலரைப் பார்த்தால் சிரிப்பும் வரும். அப்படி கவனித்துதான் ‘எங்கள் அண்ணா’ படத்தில் அந்த கதாபாத்திரத்தைச் செய்தேன். அதை இயல்பாக இருக்கிறது என்று கேப்டன் விஜயகாந்த் அண்ணன் பாராட்டியது என்னால் மறக்க முடியாது.
பிறகு எங்கு படப்பிடிப்புக்கு சென்றாலும் என்னை போல் இருப்பவர்களை அவர் அருகில் உட்கார வைத்துக்கொள்வார். நன்றாக அரட்டை அடிப்பார். யாருக்கும் தெரியாமல் பல உதவிகளைச் செய்திருக்கிறார். ஒரு முறை, படிப்பதற்குப் பண உதவி கேட்டு கோவையில் இருந்து ஒரு பையன் அவர் அலுவலகத்துக்கு வந்திருக்கிறான். அண்ணன் அங்கு இல்லை. பிறகு அவரிடம் விஷயத்தைச் சொன்னார்கள்.
உடனடியாக அண்ணனுக்கு வேண்டிய கோவையைச் சேர்ந்த ஈஸ்வரனுக்குப் பணம் அனுப்பி, அந்த பையனுக்கு கொண்டு போய் கொடு என்றார், அவர் அந்தப் பையனைப் போய் பார்த்தால், அவன் சிலருடன் கேரம் போர்டு விளையாடிக் கொண்டிருந்தான். நல்ல வசதியான வீட்டு பையன் என்பதும் தெரிய வந்திருக்கிறது. வீட்டில் செலவுக்குப் பணம் கொடுக்க மாட்டார்கள் என்பதால் இப்படி வந்து கேட்டிருக்கிறான் என்பதும் தெரிந்தது. இதை ஈஸ்வரன், கேப்டனிடம் சொல்லி விட்டு, “அவனுக்குப் பணம் கொடுக்க வேண்டாம்” என்றார்.
உடனே கேப்டன், “இல்ல. அவனுக்குப் பணம் தர்றேன்னு வாக்கு கொடுத்துட்டேன். அதனால அந்தப் பணத்தை அவன் கிட்ட கொடுத்துட்டு இனிமே இதுபோல பண்ணாதேன்னு சொல்லிருங்க” என்றார். அவ்வளவு உயர்ந்த உள்ளம் அவருக்கு! யாரும் கஷ்டப்படக்கூடாது. எல்லாரும் நன்றாக இருக்க வேண்டும் என்று நினைப்பவர் அவர். அவரைப் பின்பற்றி இப்போது என்னால் முடிந்த உதவிகளை நானும் செய்து கொண்டிருக்கிறேன்.
எனக்கு சினிமா வாய்ப்புகள் அதிகம் வராத காலத்தில், நடிகர் சங்க உறுப்பினர் ஆக நினைத்தேன். ஏற்கெனவே டப்பிங் யூனியன், சின்னத்திரை நடிகர் சங்கங்களில் உறுப்பினராக இருந்தேன். அதனால் இதிலும் உறுப்பினராக நினைத்து, நடிகர் சங்கத்துக்குச் சென்றேன். அப்போது நடிகர் கே.என்.காளை அங்கு இருந்தார். அவரை அன்போடு சித்தப்பா என்று அழைப்பேன். அவரிடம் விஷயத்தைச் சொன்னேன். ”
சாயங்காலம் வா, தலைவர்ட்ட கூட்டிட்டுப் போறேன்” என்றார். தலைவராக விஜயகாந்த் அண்ணன் இருந்தார். அவர் சொன்னது போல மாலையில் சென்றேன். அவர் கூட்டிச் சென்றார். அவர் அறைக்குச் சென்றதும், “என்ன பாஸ்கர் எப்படியிருக்கே?” என்றார். “நல்லாருக்கேண்ணே, நடிகர் சங்க உறுப்பினராகணும்” என்றேன். “அதுக்கென்ன கார்டு கொடுத்திடலாம்” என்றார்.
“இல்ல எங்கிட்ட அவ்வளவு பணம் இல்லை. சரியா வாய்ப்புகளும் வரலை, பத்து பதினைந்தாயிரம்தான் இருக்கு” என்று சொன்னேன். “முதல்ல கார்டு வாங்கிரு, அப்புறம் பார்த்துக்கலாம்” என்று சொன்னவர் அந்தப் பணத்தை வாங்கவில்லை. பிறகு நான்பணமே கட்டவில்லை. அவர்தான் எனக்காகக் கட்டியிருப்பார் என்று நினைக்கிறேன்.
அவர் கையெழுத்து போட்டுக் கொடுத்த அந்த நடிகர் சங்க உறுப்பினர் கார்டை இன்றும் பொக்கிஷமாக வைத்திருக்கிறேன். அது ஆயுட்கால உறுப்பினர் கார்டு. இதுபோல எனக்கு மட்டுமல்ல பலருக்கு பேருதவிகள் செய்தவர் அண்ணன் விஜயகாந்த். அவர் இருந்தாலும் மறைந்தாலும் எனக்கு அண்ணன், அம்மாதான். இந்தப் பிறவியில் அவரை நான் பார்த்ததும் பழகியதும் என் பாக்கியம் என்றே கருதுகிறேன்.



