குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது மக்களவையில் பிரதமர் மோடி ஆற்ற வேண்டிய உரை ரத்து செய்யப்பட்டது.
இது குறித்து விளக்கம் அளித்த சபாநாயகர் ஓம் பிர்லா, “காங்கிரஸ் பெண் எம்.பி.க்கள் சிலர் பிரதமர் இருக்கை அருகே நின்று தகாத செயல்களில் ஈடுபடக் கூடும் என தகவல் கிடைத்ததால், அவைக்கு வரவேண்டாம் என பிரதமரை கேட்டுக்கொண்டேன்” என்றார்.
இதுகுறித்து சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு, ஜோதி மணி உள்ளிட்ட காங்கிரஸ் பெண் எம்.பி.க்கள் எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது: நாடாளுமன்ற விதிமுறைகளின்படி, குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் போது, ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்களை பேச அனுமதிக்க வேண்டியது கட்டாயம். ஆனால் கடந்த 4 நாட்களாக மக்களவையில் எதிர்க்கட்சி தலைவர் பேச அனுமதி மறுக்கப்படுகிறது. அரசு உத்தரவின் பேரில் இண்டியா கூட்டணியைச் சேர்ந்த 8 எம்.பி.க்கள் இடை நீக்கம் செய்யப்பட்டனர்.
இதற்கு நீதி கேட்டு நாங்கள் உங்களை சந்தித்தபோது, தவறு ஏற்பட்டதை ஒப்புக்கொண்டு மாலை 4 மணிக்கு சந்திக்கும்படி எங்களிடம் கூறினீர்கள். அதன்பின்னர், இந்த விவகாரம் குறித்து அரசு பதிலுக்காக காத்திருப்பதாக தெரிவித்தீர்கள். இது சபாநாயகரின் அதிகாரத்தின் மீது பல கேள்விகளை எழுப்புகிறது. ஆளுங்கட்சியின் நெருக்கடிக்கு மத்தியில் நீங்கள் பணியாற்றுவது தெளிவாகிறது.
நாங்கள் பிரதமரை முற்றுகையிட முயன்றதாக குற்றம்சாட்டுவது, எங்கள் கவுரவம் மற்றும் நம்பகத்தன்மை மீதான தாக்குதல். பிரதமர் மோடி மக்களவைக்கு வராமல் இருந்ததற்கு, எங்களின் அச்சுறுத்தல் காரணம் அல்ல. எதிர்க்கட்சியை எதிர்கொள்ளும் தைரியம் அவருக்கு இல்லை. இந்த அச்சமே அவர் அவைக்கு வாராமல் இருந்ததற்கு காரணம். மக்களவையின் பாதுகாவலர் என்ற முறையில் நெருக்கடிகளுக்கு இடம் கொடுக்காமல் சுதந்திரமாக செயல்படுவீர்கள் என்று நம்புகிறோம். இவ்வாறு அதில் கூறியுள்ளனர்.



