சினிமாவில் 25 ஆண்டுகளை நிறைவு செய்திருக்கிறார் இயக்குநர் கவுதம் வாசுதேவ் மேனன். ‘மின்னலே’-வில் தொடங்கிய அவரது திரைப் பயணத்தில் 20 படங்களை இயக்கி இருக்கிறார். இதை அடுத்து ‘என்னோடு வா வீடுவரைக்கும்’ என்ற இசை நிகழ்ச்சியை நடத்தி முடித்திருக்கிறார். சமீபத்தில் அவருடன் உரையாடியதில் இருந்து…
Q
அமைதியா ஒரு நிகழ்ச்சியை நடத்தி முடிச்சிருக்கீங்க…
A
இந்த மாதிரி ஒரு பங்ஷன் நடத்தணும்னு 5 வருஷமா மனசுல இருந்தது. ‘துருவ நட்சத்திரம்’ படப் பிரச்சினை காரணமா அதைத் தள்ளி வச்சுட்டே இருந்தேன். ரெண்டு மூணு வாரத்துக்கு முன்னால, இதை ஏன் தள்ளிவைக்கணும்னு திடீர்னு தோணுச்சு. சரி ஒரு ‘பிரைவேட் பங்ஷனா’ நடத்தலாம்னு அவசரமா பண்ணினதுதான் அந்த விழா. சூர்யா, ஜோதிகா, தாணு சார், வெற்றிமாறன், லிங்குசாமி, சசி, அருண் விஜய் மாதிரி ரொம்ப சிலரை மட்டும்தான் அழைச்சிருந்தேன். சக்சஸா நடந்துச்சு. அடுத்து அதை கொஞ்சம் பெருசா பண்ணலாம்னு ஐடியா இருக்கு.
Q
உங்க படங்கள்ல வந்த பெரும்பாலான பாடல்கள் ஹிட். எப்படி உங்களுக்கு மட்டும் நடக்குது அப்படியொரு மேஜிக்?
A
அம்மாவுக்குப் பாடல்கள் பிடிக்கும். அவங்களுக்கும் சினிமாவுக்கும் தொடர்பு இல்லைனாலும் 50, 60 கள்ல வந்த பாடல்களை அம்மா மனப்பாடமா சொல்லுவாங்க. அது எந்த படம், யார் பாடுனதுங்கற வரை அவங்களுக்கு தெரியும். அதைப் பார்த்து எனக்கும் அந்த பழக்கம் வந்துச்சு. நான் படங்கள் பார்க்க ஆரம்பிச்சதும் அப்படித்தான். இப்ப எந்த பழைய பாடலைக் கேட்டாலும் யார் பாடியிருக்காங்க, என்ன படம்ங்கறதை என்னாலயும் சொல்ல முடியும்.
அப்படித்தான் எனக்குள்ளயும் பாடல் ரசனை வந்திருக்கும்னு நினைக்கிறேன். அப்புறம் ஸ்கிரிப்ட் எழுதும்போது, இந்த இடத்துல ஒரு பாட்டு வேணும்னா அப்படியே அதை விட்டுட்டுப் போக மாட்டேன். அதுல எந்த மாதிரியான வரிகள் வரணும்னு என் டீமோட ஆலோசிப்பேன். பிறகு பாடலாசிரியர் தாமரைகிட்ட அதை சொல்வேன். ‘என்னோடு வா வீடு வரைக்கும்’ பாடல் கூட அப்படித்தான். அதுக்குன்னு மெனக்கெடறதுதான் பாடல்களின் ஹிட்டுக்கு காரணம்னு நினைக்கிறேன்.
Q
இசை அமைப்பாளர்களும் உங்களுக்கு ஸ்பெஷலா பண்றாங்களே?
A
ஹாரிஸ் ஜெயராஜ், ஏ.ஆர்.ரஹ்மான் சார், இளையராஜா சார் கூட ஒர்க் பண்ணியிருக்கேன். எனக்கு இப்படி ஒரு பாட்டு வேணும்னு பொதுவா சொல்றதில்லை. அதுக்கு என்ன மூடு, என்ன வரிகள், எல்லாத்தையும் விவரிப்பேன். இந்த இடத்துல பாடல் வைக்கலாமா? வேண்டாமா? அப்படிங்கற மாதிரியும் டிஸ்கஷன் நடக்கும். பிறகுதான் கம்போஸிங் இருக்கும்.
இதுவரை 20 படங்கள் பண்ணியிருக்கேன். அதுல ‘நடுநிசி நாய்கள் ‘படத்துல பாடல் இல்லை. அது இல்லாம என் படங்கள்ல 85 பாடல்கள் இருக்கு. ஹாரிஸ் பண்ணினது 45 பாடல்கள். இதுல எல்லாமே அவங்க கொடுத்த ‘பர்ஸ்ட் ட்யூன்’ தான். அவங்க ஆப்ஷன் தர்றேன்னு சொன்னாலும் நான், ‘வேண்டாம், முதல்ல என்ன வருதோ அது போதும்’னு சொல்லிடுவேன். அப்படி வந்த பாடல்கள் இப்பவும் ரசிக்கும்படியா இருக்கறது என் அதிர்ஷ்டம் தான்.
Q
திடீர்னு நீங்க நடிக்க வந்தது யாருமே எதிர்பார்க்காத ஒண்ணு… எப்படி இருக்கு நடிப்பு பயணம்?
A
இனி அதிகமா நடிக்க மாட்டேன்னு நினைக்கிறேன். ஒரு கட்டத்துல அது தேவையா இருந்தது. இப்ப போதும்னு தோணுது. நடிச்சுட்டு இருக்கும்போதே நான் அதுக்காக வரலையேன்னு எனக்குள்ள தோணும். நான் இயக்குநர்தான். அதுதான் என் இடம். சில இயக்குநர்கள் நடிக்கக் கூப்பிடும்போது மறுக்க முடியல. சில விஷயங்களைத் தெரிஞ்சுக்கலாம் அப்படிங்கறதுக்காகவும் நடிக்கப் போனேன். சில படங்கள்ல நடிச்சுட்டு திரும்பும்போது, இதை ஏன் பண்றோம்னு நினைச்சிருக்கேன். அதனால நடிகனா என்னை இனி அதிகமா பார்க்க முடியாது.
Q
சரித்திர, புராணக் கதைகளை இப்ப இருக்கிற விஷயங்களோட இணைக்கிற மாதிரி படங்கள் வந்துட்டு இருக்கு… உங்களுக்கு அப்படி படம் பண்ற ஐடியா இருக்கா?
A
இருக்கு. இப்ப என்கிட்ட ஒரு காதல் கதை இருக்கு. அதுக்கு யங் ஹீரோ இல்லை. இப்ப இருக்கிற இளம் நடிகர்கள் ஒரு படத்துலயே சூப்பர் ஸ்டார் ஆயிடறாங்க. அவங்க கதை கேட்கவே ரெடியா இல்லை. அப்படியே இருந்தாலும் காதல் கதை பண்ற ஐடியா இல்லை. அவங்க வேற மூடுல இருக்காங்க. நீங்க கேட்கிற மாதிரி, ஜெயமோகன் சார் கதை ஒண்ணு இருக்கு. ஆனா அதுக்கு நிறைய விஷயங்கள் சரியா அமையணும்.
Q
உங்க படங்கள்ல பெண் கதாபாத்திரங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்திருக்கீங்களே…
A
ஆமா. நான் இயல்பா எழுதின கேரக்டர்கள்தான். எங்கிட்டயே நிறைய பேர் கேட்டிருக்காங்க எப்படின்னு. அப்பதான் இவ்வளவு விஷயங்கள் கவனிக்கிறாங்களான்னு தோணுச்சு. என் கதாபாத்திரங்கள் நான் வாழ்க்கையில சந்திச்ச பெண்களோட இன்ஸ்பிரேஷன்ல எழுதினதுதான்.
Q
நீங்க எழுதின ஹீரோயின் கேரக்டர்கள்ல உங்களுக்கு ரொம்ப பிடிச்சது எது?
A
இதை ஒரு காம்பினேஷனாதான் சொல்வேன். ‘காக்க காக்க’ மாயாகிட்ட என் அம்மாவோட சாயல் இருந்தது. அவங்களோட 20, 25 வயசு போட்டோக்களை பார்த்திருக்கேன். ரொம்ப மேட்சிங்கா டிரெஸ் போட்டிருப்பாங்க. அப்படித்தான் பேசுவாங்க. என் மனைவியின் நகைச்சுவை தன்மையும் அதுக்குள்ள இருக்கும். ‘வேட்டையாடு விளையாடு’ ஆராதனா எனக்கு தெரிஞ்ச ஒருத்தங்களை வச்சு எழுதினேன்.
‘விண்ணைத் தாண்டி வருவாயா’ ஜெஸி, எங்கமேல் வீட்டிலேயே இருந்தாங்க. அவங்களை எனக்கு ரொம்ப நல்லா தெரியும். அவங்ககிட்ட இந்தப் படம் ரிலீஸாகறதுக்கு ஒரு வாரத்துக்கு முன்னாலதான்சொன்னேன். கேட்டதும் அப்செட்டா இருந்தாங்க. அப்புறம் படம் காண்பிச்சேன். அழுதுகிட்டே பார்த்தாங்க. அவங்க பெயரை மட்டும் கதையில மாத்திருக்கலாமோன்னு தோணுச்சு. ‘வாரணம் ஆயிரம்’ சமீரா ரெட்டி கேரக்டர், நான் படிக்கும் போது எனக்கு ஒரு பிரண்ட் இருந்தாங்க. அவங்கதான். ஆண் கதாபாத்திரங்கள் பார்த்தீங்கன்னா அது நான் தான். அதுல வர்ற வில்லனும் நானாகத்தான் இருப்பேன்.
Q
சினிமாவுல ஏ.ஐ தொழில்நுட்பத்தோட தாக்கம் பற்றி என்ன நினைக்கிறீங்க?
A
அது, கிரியேட்டிவ் சைட்ல நிறைய உதவியா இருக்கு. நிறைய ஐடியாஸ் கிடைக்குது. ஆனா, முழுசா அதை நம்ப முடியாது. என்ன தொழில்நுட்பம் வந்தாலும் நீங்க ஹீரோவை மாத்த முடியாதே. அந்த நடிகர், கதைக்கு என்ன பண்றார்ங்கறது முக்கியம். அதை வச்சுதான் இயக்குநர் அடுத்த கட்டம் போக முடியும். ‘விண்ணை தாண்டி வருவாயா’ கிளைமாக்ஸை, ஹீரோ பெர்பாமன்ஸ்ல கொடுத்த இன்புட் வச்சுதான் முடிவு பண்ணினேன். ‘என்னை அறிந்தால்’ படத்துலயும் ஒரு விஷயம் பண்ணினோம். அது முக்கியம். அதை ஏ.ஐ.யால பண்ண முடியாது.
Q
கிளைமாக்ஸை முதல்ல எழுதமாட்டீங்கன்னு உங்க மேலயும் விமர்சனங்கள் இருக்கு…
A
அது உண்மையில்லை. எல்லாமே பேப்பர்ல இருக்கும். ‘விண்ணைத்தாண்டி வருவாயா’ படத்துக்கு ஒரு கிளைமாக்ஸ் எழுதி வச்சிருந்தேன். எப்படின்னா, ஹீரோ, சிரஞ்சீவி நடிக்கிற படத்தை ஷுட் பண்ணிட்டிருக்கார். ‘டைரக்டர் ஏன் மூட் அவுட்ல இருக்கார்’னு சிரஞ்சீவி கேட்கிறார். ‘கேர்ள் பிரண்டுக்கு இன்னைக்கு கல்யாணம்’னு சொல்றாங்க. ஷூட்டிங்கை நிறுத்திட்டு ஒரு ஹெலிகாப்டர்ல கல்யாணம் நடக்கிற இடத்துக்கு போறாங்க. அங்க என்ன நடக்குதுன்னு எழுதியிருப்பேன். சிரஞ்சீவி, ஹெலிகாப்டர்னு என் டீம் மகிழ்ச்சியா இருந்தாங்க.
ஆனா அந்த கிளைமாக்ஸ் எனக்கே கேவலமா இருந்துச்சு. 80 %ஷூட்டிங் முடிஞ்ச பிறகுதான் இது அந்த மாதிரி படம் இல்லை, வேறன்னு தோணுச்சு. இதுதான் பரிணாமம். நான், ‘தயாரிப்பாளர்கிட்ட சொல்லிட்டேன், ஹீரோகிட்ட சொல்லிட்டேன், மாத்த வேண்டாம்’னு நினைச்சிருந்தா ஆடியன்ஸ் உட்கார்ந்திருக்கவேமாட்டாங்க. அதுதான் ‘பிலிம் மேக்கிங்’. இது இப்படிஇருந்தாலும் பெரும்பாலான படங்கள்ல முழு ஸ்கிரிப்டோடதான் போயிருக்கேன்.
Q
25 வருட திரைப்பயணம் எப்படி இருக்கு…
A
நல்லா இருந்திருக்கு. ‘இதை இப்படி பண்ணலாமா, இவங்களோட படம் பண்ணலாமா’ன்னு எல்லாத்தையும் நானே முடிவுபண்ணி செயல்படுத்தியதால மகிழ்ச்சியா தான் இருக்கு. இந்த பயணத்துல ஒரு விஷயம் என்னை பாதிச்சிருக்குனா அது ‘துருவநட்சத்திரம்’ தான். வேற எதுவும் இல்லை.
Q
இந்த பயணத்துல எதை சக்சஸா பார்க்கிறீங்க?
A
‘மின்னலே’ தான். அந்த படம் பண்ணும்போது, மாதவன் மட்டும்தான் தெரிஞ்சவர். மத்தவங்க புதுசு. அதனால இந்தப் படத்தைப் பார்க்க மக்கள் தியேட்டருக்கு வருவாங்களான்னு நினைச்சிருக்கேன். அப்பதான் ‘வசீகரா’ பாடல் ரிலீஸ் ஆச்சு. பிப்ரவரியில படம் ரிலீஸ். டிசம்பர்ல பாடலை ரிலீஸ் பண்ணினோம். அந்த பாடலைக் கேட்டு அதுக்காகத்தான் முதல்ல ஆடியன்ஸ் தியேட்டருக்கு வந்தாங்க. இந்தப் படத்தோட வெற்றியாலதான் எனக்கு ‘காக்க காக்க’கிடைச்சது. அதைப் பார்த்துதான் கமல் சார் ‘வேட்டையாடு விளையாடு’ கொடுத்தார். அதனால என்னோட தொடக்கத்தைதான் முக்கியமான வெற்றின்னு நினைக்கிறேன்.



