இன்றைய டி20 சூப்பர் ஸ்டாரான அபிஷேக் சர்மாவை 2018 ஐபிஎல் தொடரில் டெல்லி கேபிடல்ஸில் இணைந்திருந்த காலத்திலேயே அவரது அபாரத் திறமையை உணர்ந்து, அவரை அணியில் தக்கவைத்துக்கொள்ள உரிமையாளர்களிடம் கெஞ்சிக் கூத்தாடியதாக ஆஸ்திரேலிய பேட்டிங் லெஜண்ட் ரிக்கி பாண்டிங் இப்போது தெரிவித்துள்ளார்.
வரவிருக்கும் டி20 உலகக் கோப்பையில் இந்திய அணியின் தொடக்க வீரர் அபிஷேக் சர்மா மிக அதிக ரன்கள் குவிக்கும் வீரராகவும், தொடரின் சிறந்த வீரர் விருதையும் பெறக்கூடியவராகவும் இருப்பார் என்று ரிக்கி பாண்டிங் உறுதியாக நம்புகிறார்.
ஐசிசி ரிவ்யூ நிகழ்ச்சியில் பேசிய பாண்டிங் கூறியதாவது: “அபிஷேக்கின் முதல் ஐபிஎல் பயிற்சியாளர் நான் தான். 17 வயதில் அறிமுகமாகி முதல் பந்திலேயே நேராக பவுலரின் தலைக்கு மேல் பவுண்டரி விளாசினார். அந்த கிளாசிக்கல் ஸ்ட்ரெயிட் பேட் ஷாட், காட்சியுடன் சேர்ந்து, இவர் சாதாரண வீரர் அல்ல என்பதை எனக்குக் காட்டியது.
அவரை டெல்லி கேப்பிடல்ஸ் அணியிலேயே தக்க வைக்குமாறு உரிமையாளர்களிடம் கெஞ்சிக் கூத்தாடினேன். அவரை டிரேட் செய்ய வேண்டாம் என்று பல முறை சொல்லிப் பார்த்தேன். இவர் ஒரு சூப்பர் ஸ்டார் ஆகப் போகிறார் என்று அப்போதே தெரிந்தது. இப்போது அதுதான் நடந்திருக்கிறது”
அவர் இந்த 2026 டி20 உலகக்கோப்பைத் தொடரில் அதிக ரன் குவிப்பவராக இருப்பார், தொடரிலேயே சிறந்த வீரராகவும் மாறக்கூடிய அளவுக்கு திறமை கொண்டவர். அவர் அப்படி விளையாடினால் இந்திய அணியை தோற்கடிப்பது இன்னும் கடினமாகும்.
அவர் அப்படிச் செய்யவில்லை என்றால், மற்ற அணிகளைப் போலவே இந்தியாவும் பாதிக்கப்படலாம். அந்த அளவுக்கு இந்த உலகக் கோப்பையில் அபிஷேக் முக்கியமானவர்.” என்றார் ரிக்கி பாண்டிங்.
2024 ஜூலை மாதம் டி20 சர்வதேச அறிமுகம் ஆன பிறகே 37 இன்னிங்ஸ்களில் 1297 ரன்கள், 37.05 சராசரி, 194.74 என்ற அபாரமான ஸ்ட்ரைக் ரேட், இரண்டு அதிவேக சதங்கள் மற்றும் எட்டு அரை சதங்கள் என அபிஷேக்கின் ஆட்டம் உச்சத்தில் உள்ளது.
நடப்பு சாம்பியன் இந்தியா, பிப்ரவரி 7-ஆம் தேதி மும்பையில் அமெரிக்க அணிக்கு எதிராக உலகக் கோப்பை பயணத்தை தொடங்குகிறது; இந்த உலகக்கோப்பையில் அபிஷேக் சர்மாவின் பேட் இந்தியாவின் மிகப் பெரிய ஆயுதமாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.



