ரஞ்சி கிரிக்கெட் போட்டியில் பரோடா அணிக்கெதிராக தமிழ்நாடு அணி தனது முதல் இன்னிங்ஸில் 7 விக்கெட் இழப்புக்கு 411 ரன்கள் குவித்துள்ளது. இதன்மூலம் தமிழக அணி 36 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.
பரோடா, தமிழ்நாடு அணிகளுக்கு இடையிலான இந்தப் போட்டி சேலம் எஸ்சிஎஃப் கிரிக்கெட் மைதானத்தில் கடந்த மாதம் 29-ம் தேதி தொடங்கியது.
முதல் இன்னிங்ஸை விளையாடிய பரோடா அணி 375 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தது. இதையடுத்து தமிழ்நாடு அணி தனது முதல் இன்னிங்ஸை விளையாடத் தொடங்கியது. 2-ம் நாள் ஆட்ட நேர இறுதியில் தமிழ்நாடு அணி விக்கெட் இழப்பின்றி 118 ரன்கள் எடுத்திருந்தது.
இந்நிலையில் நேற்று நடைபெற்ற 3-ம் நாள் ஆட்டத்தை அதிஷ் 42 ரன்களுடனும், விமல் குமார் 66 ரன்களுடனும் தொடங்கினர். 43 ரன்கள் எடுத்த நிலையில் அதிஷ் ஆட்டமிழந்தார். ஆனால் அதன் பின்னர் விமல்குமாருடன் ஜோடி சேர்ந்த பிரதோஷ் ரஞ்சன் பால் சிறப்பாக விளையாடினார்.
பிரதோஷ் ரஞ்சன் பால் 80 ரன்கள் எடுத்திருந்தபோது ஆட்டமிழந்தார். தொடக்க ஆட்டக்காரர் விமல் குமார் அதிரடியாக விளையாடி சதமடித்தார். அவர் 334 பந்துகளில் 182 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ஆந்த்ரே சித்தார்த் 7, அஜிதேஷ் குருசாமி 15, சோனு யாதவ் 15, சாய்கிஷோர் 18 ரன்கள் எடுத்தனர். நிதிஷ் ராஜகோபால் 31 ரன்களுடனும், பி.வித்யுத் ரன் கணக்கைத் தொடங்காமலும் களத்தில் உள்ளனர்.
பரோடா அணி தரப்பில் மகேஷ் பித்தியா 4 விக்கெட்களையும், பார்கவ் பட் 2 விக்கெட்களையும், நினத் அஸ்வின்குமார் ரத்வா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினார். முதல் இன்னிங்ஸில் 36 ரன்கள் முன்னிலை பெற்ற நிலையில் தமிழ்நாடு அணி இன்று கடைசி நாள் ஆட்டத்தை விளையாடவுள்ளது.



