நடிகை கோமலி பிரசாத் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் படத்துக்கு ‘மண்டவெட்டி’ என்று தலைப்பு வைத்துள்ளனர். இதன் படப்பிடிப்பு சென்னையில் பூஜையுடன் தொடங்கியது. சரண்ராஜ் செந்தில்குமார் இயக்கி, தனது டஸ்கர்ஸ் டென் பிக்சர்ஸ் சார்பில் தயாரிக்கும் இந்தப் படத்தில் பி.எல்.தேனப்பன், கஜராஜ், அம்ரிதா ஆகியோர் முக்கிய கதாபாத்திர ங்களில் நடிக்கின்றனர்.
சூப்பர்நேச்சுரல் க்ரைம் த்ரில்லராக உருவாகும் இப்படம், ஒரு பெண்ணின் உளவியல் மற்றும் உணர்வுப்பூர்வமான பயணத்தை யும் மனித உணர்வுகளின் ஆழத்தையும் அதற்கு பின்னால் உள்ள மர்மத்தையும் பரபரப்பான களத்தில் பேச இருக்கிறது.
இப்படம் பற்றி இயக்குநர் சரண்ராஜ் செந்தில்குமார் கூறும்போது, “’வெள்ளகுதிர’ படத்துக்குப் பிறகு இதை இயக்குகிறேன். நாயகிக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாகும் கதையை கொண்ட படம் இது. உணர்வுகள் மற்றும் துணிச்சலான கதை சொல்லலுடன் ரசிகர்களுக்கு புதிய அனுபவத்தை இந்தப் படம் கொடுக்கும். பிரகாஷ் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்துக்கு, தீபக் வேணு கோபால் இசை அமைக்கிறார்” என்றார்.













