பிஹார் தர்பங்கா எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானப் பணிகள் எப்போது முடியும்? – மத்திய அரசுக்கு காங். கேள்வி

0
57

கடந்த பிப்ரவரி 2015-ல் பிஹாரின் தர்பங்காவில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டப்படும் என்று மத்திய அரசு அறிவித்தது.

அதன்பின், நவம்பர் 13, 2024 அன்று பிரதமர் நரேந்திர மோடி தர்பங்காவின் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டினார். இது ரூ.1,264 கோடியில் 187 ஏக்கரில் கட்டப்படுகிறது. ஆனால், கடந்த ஓராண்டாக மருத்துவமனையின் பிரதான வாயில் மட்டுமே கட்டப்பட்டுள்ளது என் மத்திய அரசை காங்கிரஸ் விமர்சித்துள்ளது.

இதுகுறித்து பிஹார் காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் அசித் நாத் திவாரி கூறுகையில், “கடந்த 10 ஆண்டுகளில் தர்பங்கா எய்ம்ஸின் பிரதான வாயிலை மட்டுமே அரசால் கட்ட முடிந்துள்ளது. இதன் மூலம் மக்களுக்கு மத்திய அரசு துரோகம் இழைத்துவிட்டது. ஆனால், தர்பங்கா எய்ம்ஸில் சிகிச்சை தொடங்கப்பட்டுவிட்டதாக மத்திய அரசு கூறியுள்ளது.

பிரதமர் நரேந்திர மோடியும் தொடர்ந்து பொய் சொல்லி வருகிறார். உண்மை என்னவென்றால் அங்கு ஒரு பிரதான வாயில் மட்டுமே கட்டப்பட்டுள்ளது. சுகாதாரம் போன்ற ஒரு அடிப்படை தேவையில்கூட அரசியல் செய்யப்படுகிறது” என்றார்.

பிஹாரில் பாஜக ஆதரவுடன் ஐக்கிய ஜனதா தளம் சார்பில் முதல்வர் நிதிஷ்குமார் ஆட்சி உள்ளது. தர்பங்காவில் பாஜக எம்.பி. மற்றும் எம்எல்ஏ.க்கள் உள்ளனர். எனினும், எய்ம்ஸ் மருத்துவமனை கட்டும் பணிகள் தாமதமாகி வருகின்றன.

இதுகுறித்து எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பகுதி மிதிலாவின் மாணவர் சங்கத் தலைவர் கோபால் சவுத்ரி கூறுகையில், “மக்களின் ஆரோக்கியத்தை அரசு கேலிக் கூத்தாக்கி வருகிறது. அரசு வேண்டுமென்றே எய்ம்ஸ் திட்டத்தை கிடப்பில் போட விரும்புகிறது. எய்ம்ஸ் கட்டுமானப் பணிகளை விரைவில் தொடங்காவிட்டால், மாணவர்களும் இளைஞர்களும் போராட்டத்தில் ஈடுபட வேண்டிய கட்டாயம் ஏற்படும்” என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here