கல்யாண் டோம்பிவிலி மாநகராட்சியில் அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கு துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா கட்சிக்கு ராஜ் தாக்கரே தலைமையிலான நவநிர்மாண் சேனா (எம்என்எஸ்) கட்சி ஆதரவு கொடுத்துள்ளது.
மகாராஷ்டிராவில் கடந்த 15-ம் தேதி நடைபெற்ற பல்வேறு நகராட்சிகள், மாநகராட்சிகளுக்கான உள்ளாட்சித் தேர்தலில் மகாயுதி கூட்டணிக் கட்சிகள் இணைந்துப் போட்டியிட்டன. அதேபோல் முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா, எம்என்எஸ் கட்சிகள் இணைந்து போட்டியிட்டன.
இந்நிலையில் 122 கவுன்சிலர்கள் கொண்ட கல்யாண் டோம்பிவிலி (கேடிஎம்சி) மாநகராட்சியில் நடைபெற்ற தேர்தலில் ஷிண்டே தலைமையிலான சிவசேனா கட்சி 53 வார்டுகளில் வெற்றி பெற்றது. பாஜக 50 வார்டுகளில் வெற்றி பெற்றது. எம்என்எஸ் கட்சி 5 வார்டுகளிலும், சிவசேனா (உத்தவ்) 11 வார்டுகளிலும், காங்கிரஸ் 2 வார்டுகளிலும், தேசியவாத காங்கிரஸ் (சரத் பவார்) ஒரு வார்டிலும் வெற்றி பெற்றது.
இந்நிலையில் கல்யாண் டோம்பிவிலி மாநகராட்சியில் எம்என்எஸ் கட்சி, சிவசேனாவுக்கு (ஷிண்டே) ஆதரவு தருவதாக அறிவித்துள்ளது என்று சிவசேனா எம்.பி. ஸ்ரீகாந்த் ஷிண்டே நேற்று அறிவித்தார்.



