2026 தேர்தலுக்கு பணத்தை வாரி இறைக்க கனிமவள கொள்ளை கும்பலை நம்பியிருக்கும் திமுக: அண்ணாமலை

0
229

வரும் 2026 சட்டப்பேரவை தேர்தலுக்கு பணத்தை வாரி இறைக்க கனிமவளக் கொள்ளை கும்பலை திமுக நம்பியிருப்பதாக அண்ணாமலை குற்றம்சாட்டி உள்ளார்.

இதுதொடர்பாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கை: திமுக ஆட்சிக்கு வந்ததில் இருந்து, தமிழகம் முழுவதுமே, கனிமவளங்கள் கொள்ளைப்போவது தொடர்கதை ஆகியிருக்கிறது. திமுகவின் ஆசியுடன், கரூர் கேங், புதுக்கோட்டை கேங் என இரு கும்பல்கள் தலைமையில், தமிழகம் முழுவதும் கனிமவளங்களைக் கடத்தி, கேரளாவுக்கு விற்றுக் கொண்டிருக்கிறது. ஒட்டுமொத்த மேற்குத் தொடர்ச்சி மலையையுமே அழித்துவிட்டுத்தான் ஓய்வார்கள் என்பது போல அவர்கள் நடவடிக்கை இருக்கிறது.

தமிழகத்தில் கனிமவளங்களைப் பாதுகாக்கப் போராடி வரும் சமூக ஆர்வலர்களுக்கும் பாதுகாப்பு இல்லாத சூழலே நிலவி வருகிறது. புதுக்கோட்டை மாவட்டத்தில், கனிமவளக் கொள்ளையர்களை எதிர்த்துப் புகார் அளித்த சமூக ஆர்வலர் ஜெகபர் அலி லாரி ஏற்றிக் கொலை செய்யப்பட்டார். கனிமவளக் கொள்ளையைப் பற்றி புகார் அளித்து வீடு திரும்பும் முன், கொள்ளையர்களுக்கே புகாரைக் கசியவிட்டு, சமூக ஆர்வலர்களின் உயிரைப் பறிக்கும் வகையில் ஒரு காட்டாட்சியை நடத்தி வருகிறது இந்த பேரிடர் மாடல் திமுக அரசு.

திமுக ஆதரவோடு செயல்படும் புதுக்கோட்டை மற்றும் கரூர் கும்பல், கனிமங்களை ஏற்றிச் செல்லும் லாரிகளிடம், கமிஷன் வசூலித்துவிட்டு, அனுமதிக்கப்பட்ட அளவைவிட அதிகமாக கற்களை வெட்டி எடுப்பதோடு, அனுமதிச் சீட்டுக்களையும் முறைகேடாகப் பயன்படுத்தி கொள்ளையடித்துக் கொண்டிருக்கின்றனர்.

கோவை மாவட்டத்தில் உள்ள கல்குவாரிகளில், தொடர்ந்து பல விதிமீறல்கள் நடைபெற்று வருகின்றன. இதனால் பொதுமக்களும், விவசாயிகளும் பெரிதும் பாதிப்புக்குள்ளாகி வருவதோடு, அரசுக்கும் பெரும் இழப்பு ஏற்பட்டு வருகிறது. வரும் 2026 சட்டப்பேரவைத் தேர்தலில், தங்கள் தோல்வி உறுதி என்பதை அறிந்து, தேர்தலின்போது, பணத்தை வாரி இறைக்க திமுக முடிவு செய்திருக்கிறது. அதற்காக, பொதுமக்களையும் கனிமவளக் கொள்ளையை எதிர்ப்பவர்களையும் அச்சுறுத்தி மிரட்டி, கொலையும் செய்து, கொள்ளையடித்துக் கொண்டிருக்கும் இந்தக் கொள்ளைக் கும்பலின் வசூலைத்தான் நம்பியிருக்கிறது என்பது, கனிமவளக் கொள்ளையை திமுக அரசு கண்டும் காணாமல் இருப்பதில் இருந்தே தெளிவாகத் தெரிகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here