ஒடிசா மாநிலத்தில் உள்ள புரி ஜெகந்நாதர் கோயிலில் ரத்ன பண்டார் என்ற கருவூல அறை உள்ளது. ஒடிசா அரசு அனுமதி வழங்கியதையடுத்து 46 ஆண்டுகளுக்கு பிறகு கடந்த 14-ம் தேதி கருவூல அறை திறக்கப்பட்டது.
அப்போது அங்கு 5 முதல் 7 சிறிய பழங்கால சிலைகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இது குறித்து ரத்ன பண்டாரை திறப்பதற்காக அமைக்கப்பட்ட 11 உறுப்பினர் கொண்ட குழுவின் தலைவர் விஸ்வநாத் ரத் கூறுகையில், ‘‘ரத்ன பண்டார் கடந்த 40 ஆண்டுகளுக்கு மேலாக மூடப்பட்ட நிலையில் இருந்ததால், அதில் இருந்த பழங்கால சாமி சிலைகள் கருப்பாக இருந்தன. இந்த சிலைகள் தற்காலிக பெட்டக அறைக்கு மாற்றப்படும்’’ என்றார்.கருவூலத்தின் உள்அறையில் உள்ள அலமாரிகளில் தங்க நகைகள், தங்க நாணயங்கள், வெள்ளிப் பொருட்கள், வைரங்கள் போன்ற பொக்கிஷங்கள் இருக்கலாம் என நம்பப்படுகிறது.
ரத்ன பண்டாருக்குள் நுழைந்த சேவகர்கள் குழுவில் இடம்பெற்ற துர்கா பிரசாத் தாஸ்மகோபத்ரா கூறுகையில், ‘‘ரத்ன பண்டாரின் வெளி அறையில் தங்கம் மற்றும் வெள்ளிப் பொருட்கள் இருந்தன. அது ஆண்டுத் திருவிழாவுக்காக திறக்கப்பட்டது. உள்அறையில் என்ன பொக்கிஷங்கள் உள்ளன என்பது அதை திறந்து ஆய்வு செய்யும்போதுதான் தெரியும்’’ என்றார்.