தேஜஸ், மன்னை, குருவாயூர் உட்பட 5 விரைவு ரயில்கள் தாம்பரத்தில் இருந்து இயக்கம்

0
432

எழும்பூர் ரயில் நிலையத்தில் மறுசீரமைப் பணியால், தேஜஸ், மன்னை, குருவாயூர் விரைவு ரயில் உள்பட 5 ரயில்கள் தாம்பரத்தில் இருந்து இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளளது.

தமிழகத்தில் முக்கிய ரயில் நிலையங்களில் ஒன்றான எழும்பூர் ரயில் நிலையத்தில் ரூ.734.91 கோடி மதிப்பில் மறுசீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. தற்போது, நடைமேம்பாலம் அமைக்க ஆரம்பக்கட்ட பணிகள் தொடங்கியுள்ளன.

இதனால், எழும்பூர் – புதுச்சேரி இடையே இயக்கப்படும் புதுச்சேரி மெமு பாசஞ்சர் ரயில் கடற்கரை ரயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டு, வந்தடையும் என்றும், புதுடெல்லி – எழும்பூர் இடையே இயக்கப்பட்ட கிராண்ட் டிரங்க் ரயில் சென்ட்ரலில் இருந்து இயக்கப்படும் என்றும் ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது.

இதன் தொடர்ச்சியாக, எழும்பூர் – மதுரை தேஜஸ் விரைவு ரயில் உள்பட 6 விரைவு ரயில்கள் புறப்படும் இடம் மாற்றம் செய்யப்பட உள்ளன. இவற்றில் 5 விரைவு ரயில்கள் தாம்பரத்தில் இருந்து இயக்கப்பட உள்ளன.

அதன்படி, சென்னை எழும்பூர் – மதுரை இடையே இயக்கப்படும் தேஜஸ் விரைவு ரயில் (22671-22672) ஜூன் 20 முதல் ஆக.18-ம் தேதி வரை தாம்பரத்தில் இருந்து காலை 6.22 மணிக்கு புறப்படும். அதேபோல், இரவு 9.25 மணிக்கு வந்தடையும்.

எழும்பூர் – மன்னார்குடி இடையே இயக்கப்படும் மன்னை விரைவு ரயில் (16179-16180) ஜூன் 20 முதல் ஆக.18-ம் தேதி வரை தாம்பரத்தில் இரவு 11.22 மணிக்கு புறப்படும். மன்னார்குடியில் இருந்து தாம்பரத்துக்கு அதிகாலை 5 மணிக்கு வந்தடையும்.

எழும்பூர் – திருச்செந்தூர் இடையே இயக்கப்படும் செந்தூர் விரைவு ரயில் (20605-20606) ஜூன் 20 முதல் ஆக.18-ம் தேதி வரை தாம்பரத்தில் இருந்து மாலை 4.27 மணிக்கு புறப்படும். காலை 10 மணிக்கு தாம்பரத்தை வந்தடையும்.

எழும்பூர் – குருவாயூர் இடையே இயக்கப்படும் விரைவு ரயில் (16127-16128) ஜூன் 20 முதல் ஆக.19-ம் தேதி வரை தாம்பரத்தில் இருந்து காலை 10.47 மணிக்கு புறப்படும். இதுபோல, குருவாயூரில் இருந்து புறப்பட்டு இரவு 7.45 மணிக்கு தாம்பரம் வந்தடையும்.

எழும்பூர் – கொல்லம் இடையே இயக்கப்படும் விரைவு ரயில் (16101-16102), ஜூன் 20 முதல் ஆக.18-ம் தேதி வரை தாம்பரத்தில் இருந்து மாலை 5.27 மணிக்கு புறப்படும். தாம்பரத்துக்கு அதிகாலை 2.45 மணிக்கு வந்தடையும்.

கடற்கரையில் இருந்து இயக்கம்: தாம்பரம் – ஹைதராபாத் இடையே இயக்கப்படும் விரைவு ரயில் (12759, 12760), ஜூன் 20 முதல் ஆக.18-ம் தேதி வரை சென்னை கடற்கரையில் இருந்து இயக்கப்படும்.

மதுரை – ராஜஸ்தான் மாநிலம் பிகானிர் வாராந்திர விரைவு ரயில் (22631) ஜூன் 26 முதல் ஆக.14-ம் தேதி வரையும், மன்னார்குடி – ராஜஸ்தான் ஜோத்பூர் வாராந்திர விரைவு ரயில் ஜூன் 23 முதல் ஆக.18-ம் தேதி வரை எழும்பூருக்குப் பதிலாக கடற்கரை ரயில் நிலையத்தில் நின்றுசெல்லும்.

இத்தகவல் தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here