சென்னை, காமராஜர் துறைமுகங்களில் ரூ.187 கோடியில் 4 உள்கட்டமைப்பு திட்டங்கள்: மத்திய அமைச்சர் தொடங்கி வைத்தார்

0
40

சென்னை மற்றும் காமராஜர் துறைமுகங்களில் ரூ.187 கோடி மதிப்பிலான 4 உள்கட்டமைப்பு திட்டங்களை மத்திய அமைச்சர் சர்பானந்தா சோனோவால் தொடங்கி வைத்தார். சென்னை துறைமுகத்தில் ஏற்றுமதி, இறக்குமதி சரக்குகளை பாதுகாப்பாக வைப்பதற்காக 4 கிடங்குகள் ரூ.73.91 கோடியில் கட்டப்பட்டுள்ளன.

இதேபோல், துறைமுகத்தில் கன்டெய்னர் லாரிகள் போக்குவரத்தை விரைவுபடுத்தும் வகையில் ரூ.4 கோடிமதிப்பில் சாலை வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. காமராஜர் துறைமுகத்தில் சரக்குகளை கொண்டு செல்வதற்காக ரூ.88.91 கோடி மதிப்பில் இரட்டை ரயில் பாதை அமைக்கப்பட்டுள்ளது.

மேலும், நிலக்கரி இறக்குமதி தளம் 1 மற்றும் 2-ல் ரூ.20.51 கோடிசெலவில் மின் இணைப்பு வசதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் சரக்கு கப்பல்களுக்கு மின் இணைப்பு கொடுக்க முடியும். எனவே சரக்கு கப்பல்கள் மின்சாரத்தை தயாரிக்கும் போதுஏற்படும் எரிவாயு மாசு தடுக்கப்படும். இந்த 4 உள்கட்டமைப்பு திட்டங்களையும் மத்திய துறைமுகங்கள், கப்பல் மற்றும் நீர்வழி துறை அமைச்சர் சர்பானந்தா சோனோவால் நேற்று தொடங்கி வைத்தார்.

பின்னர், அவர் சென்னை மற்றும் காமராஜர் துறைமுகங்களின் சார்பில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்றார். அப்போது, `பிரதமரின் கதிசக்தி திட்டம், கடல்சார் துறையில் அமிர்தகால தொலைநோக்கு திட்டம்-2047-ன் இலக்குகள் குறித்து ஆய்வு செய்தார். மேலும், துறைமுகங்களின் உள்கட்டமைப்பு திட்டங்களை குறித்த காலத்தில் முடிக்க வேண்டும்” என வலியுறுத்தினார்.

இந்த ஆய்வுக் கூட்டத்தில், சென்னை மற்றும் காமராஜர் துறைமுகங்களின் தலைவர் சுனில்பாலிவால், காமராஜர் துறைமுகத்தின் மேலாண்மை இயக்குநர் ஐரீன் சிந்தியா, சென்னை துறைமுகத்தின் துணைத் தலைவர் விஸ்வநாதன் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர். சென்னையில் இன்று நடைபெறும் கடல்சார் மாநாட்டில் அமைச்சர் சர்பானந்தா சோனாவால் பங்கேற்கிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here