கடந்த 24 ஆண்டுகளாக ஒடிசாவின்முதல்வராக இருந்த நவீன் பட்நாயக்கிற்கு அரசு குடியிருப்பு இல்லை. சொந்த வீட்டில் வசித்து வந்தார். இதனால் பாஜகவின் புதிய முதல்வருக்காக அம்மாநில அதிகாரிகள் அரசு குடியிருப்பை தேடி வருகின்றனர்.
கடந்த 2000-ம் ஆண்டில் ஒடிசா முதல்வரானார் நவீன் பட்நாயக். அப்போது அவர் அரசு குடியிருப்பிற்கு மாறவில்லை. அவர், தனது தந்தையும் முன்னாள் முதல்வருமான பிஜு பட்நாயக், புவனேஸ்வரில் கட்டிய புதிய பங்களாவில் குடியிருந்தார். ‘நவீன்நிவாஸ்’ எனும் பெயரிலான அந்தபங்களா முதல்வர் குடியிருப்பாக கடந்த 24 ஆண்டுகளாக செயல்பட்டு வந்தது. முதல்வர் நவீன் தனது சொந்த வீட்டையே முதல்வரின் அலுவலகமாக மாற்றினார். இதனால் முதல்வருக்கான அரசு குடியிருப்பு தேவையில்லாமல் போனது.
தற்போது ஒடிசாவில் பாஜக ஆட்சி அமைக்கும் வாய்ப்பை பெற்றுள்ளது. ஒடிசாவின் புதியமுதல்வராக பாஜகவின் மோகன்மாஜி தேர்வாகி உள்ளார். அவருக்கான அரசு குடியிருப்பையும் ஒடிசா அதிகாரிகள் தேடத் துவங்கினர். ஒடிசாவில் காலியாக உள்ள சில அரசு குடியிருப்புகள் மற்றும் முதல்வரின் குறை தீர்க்கும் அலுவலகம் ஆகியவை அடையாளம் காணப்பட்டுள்ளது. இதில் ஏதாவது ஒன்றை புதிய முதல்வரின் அரசு அலுவலகமாக மாற்ற அதிகாரிகள் ஆலோசனை செய்து வருகின்றனர்.
இதற்குமுன் ஒடிசாவின் முதல்வராக இருந்த கிரிதர் கமங், ஜே.பி.பட்நாயக் ஆகியோர், குறை தீர்க்கும் பிரிவின் கட்டிடத்தை அரசு குடியிருப்பாகப் பயன்படுத்தினர்.
இது ஒடிசாவின் ஆளுநர் மாளிகைக்கு அருகில் உள்ளது. ஒடிசாவின் புதிய முதல்வராக இன்று பதவியேற்கும் மோகன் மாஜி, அரசு அதிகாரிகள் தேர்வு செய்துள்ள இல்லங்களில் ஏதாவது ஒன்றில் தனது பணியை தொடங்க உள்ளார்.