தமிழகத்தில் ரூ.2,000 கோடியில் வளர்ச்சி, உலகளாவிய உதவி மையம் மற்றும் உற்பத்தி மையம் அமைக்க அமெரிக்காவின் ‘ட்ரில்லியன்ட்’ நிறுவனத்துடன் முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்தானது.
இதுகுறித்து தமிழக அரசு நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தமிழகத்தில் அதிக அளவில் நிறுவனங்களை தொடங்கவும், தொழில் முதலீடுகளை ஈர்க்கும் வகையிலும் அமெரிக்காவில் முதல்வர் ஸ்டாலின் அரசுமுறை பயணம் மேற்கொண்டுள்ளார். இந்த பயணத்தின்போது, சான் பிரான்சிஸ்கோவில் முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில், நோக்கியா உள்ளிட்ட 6 நிறுவனங்களுடன் ரூ.900 கோடி முதலீட்டில் 4,100 பேருக்கு வேலை வாய்ப்பு அளிக்கும் வகையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. தமிழகத்தில் செயற்கை நுண்ணறிவு ஆய்வகங்கள் அமைக்க கூகுள் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. 500 பேருக்கு வேலை அளிக்கும் வகையில் ரூ.400 கோடியில் செங்கல்பட்டு மாவட்டத்தில் புதிய தொழிற்சாலை அமைக்க ஓமியம் நிறுவனத்துடன் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.இதன்பிறகு, சிகாகோ சென்ற முதல்வர், அங்கும் முதலீட்டாளர்களை சந்தித்து பேசினார். இதையடுத்து, கடந்த செப்.3-ம் தேதி ஈட்டன் நிறுவனத்துடன் ரூ.200 கோடி முதலீட்டில், 500 பேருக்கு வேலை அளிக்கும் வகையில் அந்நிறுவன உற்பத்தி வசதியை விரிவாக்கு வதுடன், ஆராய்ச்சி, மேம்பாடு, உலகளாவிய பயன்பாட்டு பொறி யியல் மையத்தை சென்னையில் அமைக்க ஒப்பந்தம் செய்யப் பட்டது. அஷ்யூரன்ட் நிறுவனம் சார்பில் இந்தியாவின் முதல் உலகளாவிய திறன் மையத்தை (GCC) சென்னையில் அமைக்க புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. இதன்மூலம் மொத்தம் 10 நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.இதன் தொடர்ச்சியாக, தமிழகத்தில் ரூ.2,000 கோடி முதலீட்டில் வளர்ச்சி மற்றும் உலகளாவிய உதவி மையம் (Development and Global Support Centre) மற்றும் உற்பத்தி மையம் அமைக்க ட்ரில்லியன்ட் (Trilliant) நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. சிகாகோவில் கடந்த செப்.4-ம் தேதி முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் இதற்கான ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்த நிகழ்வில், ட்ரில்லியன்ட் நிறுவன தலைமை வணிக அலுவலர் மைக்கேல் ஜே மார்டிமர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
ஸ்மார்ட் கிரிட், ஸ்மார்ட் நகரங்கள், இண்டஸ்ட்ரியல் இன்டர்நெட் ஆஃப் திங்ஸ் ஆகியவற்றுக்கான தீர்வுகளை வழங்கும் முன்னணி நிறுவனமான ‘ட்ரில்லியன்ட்’, அமெரிக்காவின் வடக்கு கரோலினா மாநிலம் கேரி நகரை தலைமையிடமாக கொண்டது. விளையாட்டு காலணிகள், ஆடைகள் தயாரிக்கும் மிகப்பெரிய அமெரிக்க நிறுவனமான ‘நைக்கி’யின் (Nike) உயர் அலுவலர்களை சந்தித்த முதல்வர் ஸ்டாலின், தமிழகத்தில் முதலீடு செய்ய அழைப்பு விடுத்தார். தமிழகத்தில் தோல் அல்லாத காலணிகளின் உற்பத்தியை மேலும் விரிவுபடுத்துவதற்கான சாத்தியக்கூறுகள், சென்னையில் தயாரிப்பு உருவாக்கம் மற்றும் வடிவமைப்பு மையத்தை அமைப்பதற் கான சாத்தியக்கூறுகள், ‘நான் முதல்வன்’ திட்டத்தின்கீழ், திறன் கூட்டாண்மையுடன் இணைந்து செயல்படுவது ஆகியவை குறித்து ‘நைக்கி’ நிறுவனத்தின் தலைமை வழங்கல் அலுவலர் வெங்கடேஷ் அழகிரிசாமி, துணை தலைவர்கள் கிறிஸ்டன் ஹேன்சன், ஜார்ஜ் காசிமிரோ மற்றும் உயர் அலுவலர்களுடன் ஆலோசனை நடத்தப்பட்டது.
யுனைட்டெட் ஹெல்த்கேர் குழுமத்தின் துணை நிறுவனமும், அமெரிக்காவின் முன்னணி ஹெல்த் இன்சூரன்ஸ் நிறுவனமுமான ‘ஆப்டம்’ (Optum), சென்னையில் 5,000-க்கும் மேற்பட்ட ஊழியர்களுடன் வருவாய் சுழல் மேலாண்மை (Revenue Cycle Management) செயல்பாடுகளை மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில், ஆப்டம் இன்சைட் நிறுவனத்தின் தலைமை செயல் அலுவலர் ரோஜர் கானர், யுனைட்டெட் ஹெல்த்கேர் குழுமத்தின் முதுநிலை துணை தலைவர் ஜான் மியாட் மற்றும் உயர் அலுவலர்களை முதல்வர் ஸ்டாலின் சந்தித்து, தமிழகத்தில் புதிய தொழில் முதலீடுகளை மேற்கொள்ள அழைப்பு விடுத்தார். ஸ்டாலினுடன் ரோஜர் கானர் ஆலோசனையும் நடத்தினார். இந்த சந்திப்புகளின்போது, தமிழக தொழில் துறை அமைச்சர் டிஆர்பி.ராஜா, துறை செயலர் வி.அருண்ராய், தொழில் வழிகாட்டி நிறுவன மேலாண் இயக்குநர் வே.விஷ்ணு உடன் இருந்தனர்.
திருச்சி, மதுரையில் விரிவாக்கம்: முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட சமூக வலைதள பதிவில், ‘ட்ரில்லியன்ட் நிறுவனம் தமிழகத்தில் அதன் உற்பத்தி அலகு, வளர்ச்சி மற்றும் உலகளாவிய மையத்தை அமைக்க ரூ.2,000 கோடியில் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண் டேன். ‘நைக்கி’ நிறுவனத்துடன் அதன் காலணி உற்பத்தியை விரிவுபடுத்துவது, சென்னையில் தயாரிப்பு, உருவாக்கம், வடிவமைப்பு மையம் அமைக்க சாத்தியக்கூறுகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினேன். தமிழகத்தில் ஏற்கெனவே ‘ஆப்டம்’ நிறுவனத்தில் 5 ஆயிரம் பேர் வேலை செய்து வரும் நிலையில், அந்நிறுவனம் சுகாதார துறைக்கான திறமையாளர்களை உருவாக்க திட்டமிட்டுள்ளது. திருச்சி, மதுரையில் தங்கள் செயல்பாடுகளை விரிவுபடுத்துவது குறித்து பரிசீலிக்குமாறு கேட்டுக் கொண்டேன்’ என்று தெரிவித்துள்ளார்.