ஊட்டியில் இன்று 127-வது மலர் கண்காட்சி தொடக்கம்: முதல்வர் ஸ்டாலின் தொடங்கிவைக்கிறார்

0
91

நீலகிரி மாவட்டம் ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் புகழ்பெற்ற 127-வது மலர்க் கண்காட்சியை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கிவைக்கிறார்.

நீலகிரி மாவட்டத்தில் சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில் ஆண்டுதோறும் மே மாதத்தில் கோடை விழா நடத்தப்படுகிறது. கோத்தகிரியில் காய்கறிக் கண்காட்சியுடன் கடந்த 3-ம் தேதி கோடை விழா தொடங்கியது. இதன் ஒரு பகுதியாக, ஊட்டி தாவரவியல் பூங்காவில் 127-வது மலர்க் கண்காட்சி இன்று முதல் வரும் 25-ம் தேதி வரை நடைபெற உள்ளது. மலர்க் கண்காட்சியை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைக்கிறார்.

இந்த ஆண்டு சிறப்பம்சமாக ஜெர்மனியம் சைக்ளோபின் பால்சம், புதிய ரக ஆர்னமெண்டல்கேல், ஓரியண்டல் லில்லி, பேன்சி மேரிகோல்டு, ஜினியா, டெல்முனியம் போன்ற 275 வகையான விதைகள், செடிகள், உலகின் பல்வேறு நாடுகளில் இருந்தும் தருவிக்கப்பட்டுள்ளன. மலர்ச் செடிகள் உற்பத்தி செய்யப்பட்டு, பூங்காவின் பல்வேறு பகுதிகளில் 7.50 லட்சம் மலர் நாற்றுகள் நடவு செய்யப்பட்டுள்ளன. இதேபோல, மலர் மாடம் உட்பட பல இடங்களில் 45 ஆயிரம் மலர்த் தொட்டிகள் வைக்கப்பட்டுள்ளன.

பாரம்பரியத்தை நினைவுபடுத்தும் வகையில் பொன்னியின் செல்வன் அரண்மனையின் வடிவம் 2 லட்சம் கார்னேசன் மலர்களால் அமைக்கப்பட்டுள்ளது. சோழ அரசின் பெருமையை விளக்கும் வகையில், கரிகாலனால் கட்டப்பட்ட கல்லணை வடிவமும் மலர்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 7 லட்சம் மலர்களால் சிம்மாசனம், யானை, அன்னப்பறவை, படகு, கல்லணை, சிப்பாய்கள், ஊஞ்சல் ஆகிய அலங்காரங்கள் செய்யப்பட்டுள்ளன. மேலும், கள்ளிச்செடி மாளிகை மற்றும் கண்ணாடி மாளிகை புதுப்பிக்கப்பட்டு, அங்கும் அரியவகை தாவரங்கள் மற்றும் மலர்ச் செடிகள் வைக்கப்பட்டுள்ளன.

வழக்கமாக 5 நாட்கள் நடைபெற்று வந்த மலர்க் கண்காட்சி இந்த முறை 12 நாட்கள் நடைபெற உள்ளதால், பூந்தொட்டிகள் மற்றும் மலர்ச் செடிகள் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது. பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடத்தும் வகையில் அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது. மலர்க் கண்காட்சியையொட்டி நீலகிரி மாவட்டத்துக்கு இன்று (மே 15) உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 200-க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here