Home தேசிய செய்திகள் யமுனை நதியில் படகு கவிழ்ந்து 10 பக்தர்கள் உயிரிழப்பு

யமுனை நதியில் படகு கவிழ்ந்து 10 பக்தர்கள் உயிரிழப்பு

0

உத்தரப் பிரதேச மாநிலம் மதுராவில் நேற்று மதியம் யமுனை நதியில் பக்தர்கள் சென்ற படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், சிறார்கள் உட்பட 10 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். காணாமல் போனவர்களை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இதுகுறித்து மதுரா மாவட்ட ஆட்சியர் சி.பி. சிங் செய்தியாளர்களிடம் கூறியதாவது: பஞ்சாப் மாநிலம் லூதியானாவிலிருந்து சுமார் 30 பேர் கொண்ட பக்தர்கள் குழுவினர் மதுராவுக்கு வருகை தந்தனர். வெள்ளிக்கிழமை (நேற்று) மதியம் 2:45 மணியளவில் அவர்கள் இரண்டு படகுகளில் யமுனை நதியில் பயணம் செய்தபோது, கேசி படித்துறை அருகே எதிர்பாராதவிதமாக ஒரு படகு நதியில் கவிழ்ந்து விபத்துக்கு உள்ளானது.

இதில், சிறுவர்கள் உட்பட 10 பேர் உயிரிழந்தனர். அவர்களின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. நீரில் தத்தளித்த 17 பேர் உயிருடன் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். யமுனை நதியில் நீரோட்டம் அதிகமாக உள்ளதால், காணாமல் போனவர்களைத் தேடும் பணியில் உள்ளூர் நீச்சல் வீரர்களும், பேரிடர் மீட்புப் படையினரும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.

முதற்கட்ட விசாரணையில், படகில் அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகமான நபர்களை ஏற்றியதே விபத்துக்குக் காரணம் என்று கூறப்படுகிறது. விபத்து நடந்த இடத்தில் மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதால், உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version