பஞ்சாப் மாநிலத்தில் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தப் (எஸ்ஐஆர்) பணி முடிந்த நிலையில் இறுதிப் பட்டியல் நேற்று (அக்.12) வெளியிடப்பட்டது. இதில் மொத்தம் 13.60 லட்சம் வாக்காளர்கள் அந்த மாநிலத்தில் நீக்கப்பட்டுள்ளனர்.
நாடு முழுவதும் எஸ்ஐஆர் பணி கடந்த 2025-ல் தொடங்கியது. மொத்தம் மூன்று கட்டமாக இந்தப் பணி நடைபெறுகிறது. முதல் இரண்டு கட்டங்களுக்கான பணிகள் நடந்து முடிந்த நிலையில் மூன்றாவது கட்டப் பணி 16 மாநிலங்கள் மற்றும் 3 யூனியன் பிரதேசங்களில் நடைபெறுகிறது. மூன்றாம் கட்ட எஸ்ஐஆர் பணியில் பாஞ்சாப் மாநிலமும் ஒன்று.
இந்நிலையில், எஸ்ஐஆர் பணிக்கு பிந்தைய இறுதி வாக்காளர் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. பஞ்சாப் மாநில தலைமை தேர்தல் அதிகாரி அனிந்திதா மித்ரா, இந்தப் பட்டியலை வெளியிட்டார். தேர்தல் ஆணையம் வழங்கியுள்ள தரவுகளின் படி கடந்த ஜூன் மாதம் பஞ்சாப் மாநிலத்தில் மொத்தம் 2.14 கோடி வாக்காளர்கள் இருந்துள்ளனர். அந்த மாநிலத்தில் ஜூன் 24-ம் தேதி எஸ்ஐஆர் பணி தொடங்கியது. இந்த பணி முடிந்து கடந்த ஆகஸ்ட் மாதம் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அதில் 1.93 கோடி வாக்காளர்கள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், நேற்று வெளியான இறுதிப் பட்டியலில் 2.01 கோடி வாக்காளர்கள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. ஆட்சேபனை மற்றும் வாக்காளர் சரிபார்ப்புக்கு பின்னர் விடுபட்ட தகுதி வாய்ந்த வாக்காளர்கள் சேர்க்கப்பட்டதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
தற்போது பஞ்சாப் மாநிலத்தில் 1.03 கோடி ஆண் வாக்காளர்களும், 97.24 லட்சம் பெண் வாக்காளர்களும், மூன்றாம் பாலினத்தைச் சேர்ந்த 506 பேரும் வாக்காளர்களாக உள்ளனர். எஸ்ஐஆர் பணிக்கு பிறகு 13.60 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர்.
அடுத்த ஆண்டு பஞ்சாப் மாநிலத்தில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. மொத்தம் 117 பேரவை தொகுதிகள் அந்த மாநிலத்தில் உள்ளது. தற்போது ஆம் ஆத்மி கட்சி அங்கு ஆட்சி செய்து வருகிறது.
நாடு முழுவதும் தேர்தல் ஆணையத்தின் எஸ்ஐஆர் நடவடிக்கைக்கு எதிராக எதிர்க்கட்சிகள் குரல் கொடுத்து வருகின்றன. தலைநகர் டெல்லியில் இண்டியா கூட்டணி கட்சியினர், சிஜேபி, ஆம் ஆத்மி உள்ளிட்ட அரசியல் கட்சிகள், மாணவர் அமைப்புகள், இளைஞர் அமைப்புகள், தன்னார்வலர்கள் என தீவிர போராட்டம் மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் பஞ்சாப் மாநிலத்தில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியாகி உள்ளது.














