அஜித்குமார் நடித்துள்ள ‘விடாமுயற்சி’ படம் பொங்கலுக்கு வெளிவருவதாக இருந்தது. இதனால் மீடியம் மற்றும் சிறு பட்ஜெட் படங்கள் தங்கள் ரிலீஸை தள்ளி வைத்திருந்தன. இந்நிலையில் ‘விடாமுயற்சி’ ரிலீஸ் தள்ளிப் போனதால் பொங்கலுக்கு பல்வேறு படங்கள் வெளியாக இருப்பதாக அறிவிப்புகள் வெளியாகி இருக்கின்றன.
அதன்படி பெரிய பட்ஜெட் படங்களில், ஷங்கரின் ‘கேம்சேஞ்சர்’ 10-ம் தேதி வெளியாகிறது. அதே நாளில் பாலாவின் ‘வணங்கான்’, ஷேன் நிகம் நடிக்கும் ‘மெட்ராஸ்காரன்’ ஆகிய படங்களும் ரிலீஸ் ஆகின்றன.
கடந்த சில வருடங்களாக ரிலீஸ் ஆகாமல் இருக்கும் கவுதம் வாசுதேவ் மேனனின் ‘துருவ நட்சத்திரம்’ வரும் 11-ம் தேதி வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதே போல 2012-ம் ஆண்டு உருவான ‘மதகஜராஜா’ 12-ம் தேதி வெளியாகிறது. ஜன.14-ம் தேதி ‘காதலிக்க நேரமில்லை’, ஆகாஷ் முரளி, அதிதி ஷங்கர் நடித்துள்ள ‘நேசிப்பாயா’, கிஷன் தாஸ் நடித்துள்ள ‘தருணம்’ ஆகிய படங்கள் ரிலீஸாக இருப்பதாக அறிவிப்புகள் வெளியாகியுள்ளன.