தேசிய பெண் காவலர் துப்பாக்கி சுடும் போட்டி: வெற்றி பெற்றவர்களுக்கு பதக்கம் வழங்கினார் டிஜிபி சங்கர் ஜிவால்

0
47

மிழக காவல் துறை சார்பில் தேசியஅளவில் பெண் போலீஸாருக்கான சிறப்பு துப்பாக்கி சுடும் போட்டிகள் நேற்று வண்டலூர் அருகே ஒத்திவாக்கத்தில் தொடங்கியது. இதில் வெற்றி பெற்றவர்களுக்கு டிஜிபி சங்கர் ஜிவால் பதக்கங்களை வழங்கி பாராட்டினார்.

தமிழக காவல் துறை சார்பில்தேசிய அளவில் பெண் போலீஸாருக்கான சிறப்பு துப்பாக்கி சுடும்போட்டிகள் செங்கல்பட்டு மாவட்டம் வண்டலூர் அருகே ஒத்திவாக்கத்தில் உள்ள தமிழ்நாடு கமாண்டோ பயிற்சி பள்ளி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் ஜூன் 16-ம் தேதி நடைபெற்ற போட்டியில் கைத்துப்பாக்கி சுடும் ஸ்குவாட்டிங் போட்டியில் எல்லைப் பாதுகாப்புப் படை வீராங்கனை காவலர் பாராமிலா முதல்இடத்தையும், தமிழ்நாடு காவல்துறை வீராங்கனை உதவிஆய்வாளர் துர்கா 2-வது இடத்தையும், அசாம் காவல்துறை வீராங்கனை காவலர் இட்டு புயான் 3-வது இடத்தையும் பிடித்தனர்.

அதேபோல், ரைபிள் சுடும் 100 கஜம் ஸ்டான்டிங் போட்டியில், இந்தோ-திபெத்திய எல்லை காவல்படை வீராங்கனை வெர்சா ரவாத்முதல் இடத்தையும், குஜராத் காவல்துறை வீராங்கனை நிமிஷாபென் கே ராவாலியா 2-வது இடத்தையும், தமிழ்நாடு காவல்துறை வீராங்கனை தலைமைக் காவலர் ராதிகா 3-வது இடத்தையும் பிடித்தனர்.

மேலும், கைத்துப்பாக்கி சுடும் 25 கஜம் குயிக் ரிஃப்ளெக்ஸ் போட்டியில், எல்லைப் பாதுகாப்புப் படை வீராங்கனை காவலர் பாராமிலா முதல் இடத்தையும், எல்லைப் பாதுகாப்புப் படை வீராங்கனை காவலர் மீனாக்ஷி சந்தர் 2-வது இடத்தையும், தமிழ்நாடு காவல்துறை வீராங்கனை தலைமைக் காவலர் க.பாரதி 3-வது இடத்தையும் பிடித்தனர்.

தொடர்ந்து ரைபிள் சுடும் 200 கஜம் நீலிங் போட்டியில், அசாம்ரைப்பிள்ஸ் வீராங்கனை காவலர்மட்டா வதி சாந்தி பால் முதல்இடத்தையும், எல்லைப் பாதுகாப்புப் படை வீராங்கனை காவலர் சுனிதா 2-வது இடத்தையும், இந்தோ-திபெத்திய எல்லை காவல்படை வீராங்கனை நிர்மலா தாரகி 3-வது இடத்தையும் பிடித்தனர்.

இந்நிலையில் நேற்று நடைபெற்ற போட்டிகளை பார்வையிட்ட டிஜிபி சங்கர் ஜிவால் வெற்றி பெற்றவர்களுக்கு பதக்கங்களை வழங்கி பாராட்டினார். பின்னர் பயிற்சி மைய வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டார்.

நேற்றைய நிகழ்வில் தாம்பரம் மாநகர காவல் ஆணையர் அமல்ராஜ், ஏடிஜிபி ஜெயராம், பொருளாதார குற்றத் தடுப்பு பிரிவு ஏடிஜிபி பாலநாகதேவி, ஏடிஜிபி சந்தீப் மிட்டல், வடக்கு மண்டலம் ஐஜிநரேந்திரன் நாயர், ஐஜி (பொது) – செந்தில் குமார், ஐஜி (ஆபரேஷன்) – ஜெயஸ்ரீ உள்ளிட்ட பல உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.

நேற்று நடந்த 5 போட்டிகளில்தமிழக காவல் துறை ஒரு தங்கம், 2 வெள்ளி, 3 வெண்கலப் பதக்கங்களை வென்றது. 2 நாட்கள் நடைபெற்ற போட்டியில் தமிழகம் மொத்தம் 9 பதக்கங்களை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.