பெங்களூரு ஊரகத் தொகுதியில் தொடர்ந்து 3 முறை வெற்றி பெற்றகர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவகுமாரின் தம்பி டி.கே.சுரேஷை,முதல்முறையாக களம் கண்ட முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் மருமகன் மஞ்சுநாத் (பாஜக) 2.5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்துள்ளார்.
கர்நாடக துணை முதல்வரும் காங்கிரஸ் மாநில தலைவருமான டி.கே.சிவகுமார் அம்மாநிலஅரசியலில் மிகுந்த செல்வாக்குடன் வலம் வருகிறார். அவரது தம்பி டி.கே.சுரேஷ் பெங்களூரு ஊரக தொகுதியில் கடந்த 2013 இடைத்தேர்தல், 2014 மற்றும் 2019 ஆகிய ஆண்டுகளில் நடந்த மக்களவைத் தேர்தல்களில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
இந்த தேர்தலில் டி.கே.சுரேஷை தோற்கடிக்க வேண்டும் என பாஜக முடிவெடுத்தது. அதன்படி முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் மருமகனும் புகழ்பெற்ற இதயஅறுவை சிகிச்சை மருத்துவமான மஞ்சுநாத்தை வேட்பாளராக களமிறக்கியது.
டி.கே.சுரேஷ் அதிரடியாக தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்ட நிலையில், மருத்துவர் மஞ்சுநாத் மிகவும் அமைதியான முறையிலேயே வாக்கு சேகரித்தார். ஜெயதேவா மருத்துவமனையின் இயக்குநராக இருந்த காலத்தில் மேற்கொண்ட லட்சக்கணக்கான இதய அறுவை சிகிச்சைகளை சொல்லி, வாக்காளர்களின் இதயங்களை கொள்ளையடித்தார்.
இதனால் நேற்று வாக்கு எண்ணிக்கை தொடங்கிய நேரத்தில் இருந்து மருத்துவர் மஞ்சுநாத் முன்னிலை வகித்தார். தொடர்ந்து பின்னடைவை சந்தித்த டி.கே.சுரேஷ் காலை 11 மணிக்கே ஒருலட்சம் வாக்குகள் குறைவாக பெற்று பின்தங்கினார். இறுதியில்2.5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் மருத்துவர் மஞ்சுநாத், காங்கிரஸ் வேட்பாளர் டி.கே.சுரேஷை தோற்கடித்தார்.
இதுகுறித்து டி.கே.சுரேஷ் கூறுகையில், “3 முறை என்னை வெற்றிபெற வைத்த மக்கள், இந்தமுறை எனக்கு ஓய்வை கொடுத்துள்ளனர். அவர்களின் தீர்ப்பை ஏற்றுகொள்கிறேன்” என்றார்.