சென்னை ரயில்வே கோட்ட ரயில் நிலையங்களில் மார்ச் மாதத்துக்குள் ‘சிசிடிவி’ பொருத்த நடவடிக்கை

0
30

சென்னை ரயில்வே கோட்டத்தில் உள்ள முக்கிய ரயில் நிலையங்களில் ‘சிசிடிவி’ கேமராக்கள் பொருத்தும் பணி வரும் மார்ச் மாதத்துக்குள் முடிக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

சென்னை ரயில்வே கோட்டத்தில் மொத்தம் 160 ரயில் நிலையங்கள் உள்ளன. இவற்றில் சென்ட்ரல், எழும்பூர், தாம்பரம் உள்பட முக்கிய ரயில் நிலையங்கள் ஒவ்வொன்றிலும் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், 50-க்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும், ஆர்.பி.எஃப் படையினர், தமிழக ரயில்வே போலீஸார் ஆகியோர் இணைந்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

குறிப்பாக, பெண் பயணிகள் பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்வதற்காக, இந்த ரயில் நிலையங்களில் கண்காணிப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கிடையே, சென்னை சென்ட்ரல் – கூடூர், சென்ட்ரல் – ஜோலார்பேட்டை, எழும்பூர் – விழுப்புரம் ஆகிய மார்க்கங்களில் உள்ள முக்கிய ரயில் நிலையங்களில் பயணிகளின் பாதுகாப்பை வலுப்படுத்தும் விதமாக, சிசிடிவி கேமராக்கள் பொருத்த முடிவு எடுக்கப்பட்டது. அதன்படி, சென்னை ரயில்வே கோட்டத்தில் 74 ரயில் நிலையங்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்துவதற்கான ஒப்பந்தப்புள்ளி கடந்த ஆண்டு ஜூலையில் வழங்கப்பட்டது.

சுமார் ரூ.25 கோடி மதிப்பில் இந்த பணியை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டது. இருப்பினும், பணிகள் முடித்து பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படவில்லை.

இதுகுறித்து, ரயில்வே போலீஸார் கூறும்போது, ‘‘ரயில் நிலையங்களில் பயணிகள் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்து வருகிறது. ஆனால், அதற்கு ஏற்றார்போல, போலீஸார் இல்லை. பல்வேறு ரயில் நிலையங்களில் ‘சிசிடிவி’ கேமராக்கள் பொருத்தும் பணிகளும் மெதுவாக நடைபெறுகின்றன. இதனால், குற்றவாளிகளை உடனுக்குடன் அடையாளம் காணுவதில் சிக்கல் ஏற்படுகிறது. எனவே, ‘சிசிடிவி’ கேமராக்கள் விரைவாக பொருத்த வேண்டுமென நிர்வாகத்திடம் அறிவுறுத்தி உள்ளோம்’’ என்றார்.

ரயில் அதிகாரிகளிடம் இதுகுறித்து கேட்டபோது, “சென்னை ரயில் கோட்டத்துக்கு உட்பட பகுதிகளில் 50-க்கும் மேற்பட்ட ரயில் நிலையங்களில் 550-க்கும் மேற்பட்ட ‘சிசிடிவி’ கேமராக்கள் பொருத்தி பயன்பாட்டுக்கு வந்துள்ளன. சென்னை – ஜோலார்பேட்டை மற்றும் அரக்கோணம் – ரேணிகுண்டா வழித்தடங்களில் இருக்கும் ரயில் நிலையங்களில் ‘சிசிடிவி’ கேமராக்கள் பொருத்தும் பணிகளை மார்ச் மாதத்துக்குள் முடிக்க உள்ளோம்” என்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here