கர்நாடகாவில் ஆளும் காங்கிரஸை சமாளிக்க, பாஜக கூட்டணியின் சார்பில் களமிறக்கப்பட்ட குமாரசாமி, பசவராஜ் பொம்மை, ஜெகதீஷ் ஷெட்டர் ஆகியமூன்று முன்னாள் முதல்வர்களும் அமோகமாக வெற்றி பெற்றுள்ளனர்.
ஹாவேரி தொகுதியில் போட்டியிட்ட முன்னாள் பாஜக முதல்வர் பசவராஜ் பொம்மை, காங்கிரஸ் வேட்பாளர் கட்டாதேவர்மத்தை 43ஆயிரத்து 513 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார். இந்த தொகுதியில் வெற்றிப் பெற்றதன் மூலம், அவர் சட்டப்பேரவை உறுப்பினராக உள்ள ஷிகோன் தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
ஜெகதீஷ் ஷெட்டருக்கு பாஜக மேலிடம் பெலகாவி தொகுதியில் போட்டியிட வாய்ப்பு அளித்தது. அங்கு அவர் தன்னை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் அமைச்சர் லட்சுமி ஹெம்பல்கரின் மகன் மிரினாள் ஹெம்பல்கரை 56 ஆயிரத்து 433 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.
இதே போல மண்டியா தொகுதியில் பாஜக கூட்டணியின் சார்பில் முன்னாள் மஜத முதல்வர் குமாரசாமி களமிறங்கினார். அவர் காங்கிரஸ் வேட்பாளர் வெங்கட் ராமகவுடாவை 8 லட்சத்து 51 ஆயிரத்து 881 வாக்குகள் பெற்று தோற்கடித்தார். வெங்கட் ராமகவுடா 2 லட்சத்து 84 ஆயிரத்து 620 வாக்குகள் பெற்றார். கடந்த தேர்தலில் குமாரசாமியின் மகன் நிகில் கவுடா இதே தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்தது குறிப்பிடத்தக்கது.
சித்ரதுர்கா (தனி) தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்ட முன்னாள் துணை முதல்வர் கோவிந்த் கார்ஜோளும் வெற்றி பெற்றார்.