தேர்தல் கருத்துக் கணிப்பு நடத்தும் ‘ஆக்சிஸ் மை இந்தியா’ முகமையின் தலைவர் பிரதீப் குப்தா நேற்று நடைபெற்ற நேரலை தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கண்கலங்கி அழுதார்.
முன்னதாக, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 2024 மக்களவைத் தேர்தலில் 400 இடங்களை நிச்சயம் வெல்லும் என்று கருத்துக் கணிப்பு வெளியிட்டது ’ஆக்சிஸ் மை இந்தியா’.
350-400 தொகுதிகள்: இந்நிறுவனம் மட்டுமின்றி இந்ததேர்தல் குறித்து ’இந்தியா டுடே’, ‘ரிபப்ளிக் டிவி’ உள்ளிட்ட பல்வேறு ஊடகங்கள் வெளியிட்ட கருத்துக் கணிப்புகள் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 350-400 தொகுதிகள் வரை கைப்பற்றி தனிப்பெரும்பான்மை வகிக்கும் என்றே அறுதியிட்டுக் கூறின. ஆனால், தேர்தல் முடிவுகள் இதனுடன் ஒத்துப்போகவில்லை. பாஜக கூட்டணியால் 294 இடங்களைத் தாண்ட முடியவில்லை. இண்டியா கூட்டணி சற்றும் எதிர்பாராத வகையில் 232 இடங்களை வென்றுள்ளது.
இந்நிலையில், இந்தியா டுடே செய்தி தொலைக்காட்சி நடத்திய தேர்தல் முடிவுகள் பற்றிய விவாத நிகழ்ச்சியில் ‘ஆக்சிஸ் மை இந்தியா’ முகமையின் தலைவர் பிரதீப் குப்தா நேற்று பங்கேற்றார்.
பொய்த்துப்போனது: அப்போது ‘ஆக்சிஸ் மை இந்தியா’ முகமையின் கருத்துக் கணிப்பு பொய்த்துப்போனதை சுட்டிக்காட்டினார் நெறியாளர் ராஜ்தீப் சர்தேசாய். இதனால், விவாதத்துக்கு இடையிலேயே கண்கலங்கி மனமுடைந்து அழுதார் பிரதீப் குப்தா.