சர்வதேச யோகா தினம் ஜூன் 21 அன்று உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது.
இந்நிலையில் மூச்சுப் பயிற்சி மற்றும் யோகா பற்றி ஐ.நா. முன்னாள் அதிகாரி சித்தார்த் சாட்டர்ஜி எழுதிய “மை ஃபைவ் டு த்ரைவ்” என்ற நூலை சீனா சர்வதேச வளர்ச்சி மற்றும் ஒத்துழைப்பு முகமையின் தலைவர் லுவோ ஜாவோஹுய் பெய்ஜிங்கில் நேற்று முன்தினம் வெளியிட்டு பேசியதாவது: சீனாவுக்கான ஐநா ஒருங்கிணைப்பாளராக இருந்த சாட்டர்ஜி, சீன அரசு, கல்வித்துறை மற்றும் ஊடகங்களுடன் நெருக்கமாக பணியாற்றினார்.
மூச்சுப்பயிற்சி மற்றும் தியானத்தை சாட்டர்ஜி முறையாக மேற்கொண்டார். உடல் அசைவுகள் மற்றும் தனது தனித்துவமான பயிற்சியின் மூலம், அவர் தனது மனதை தூய்மைப்படுத்தவும், உள் மனது சுதந்திரத்தை கண்டறியவும் முயன்றார். இது ‘பிரம்மன் மற்றும் ஆத்மாவின் ஒற்றுமை’ என்ற இந்திய தத்துவ உணர்வை பிரதிபலிக்கிறது, மேலும் இது ‘விண்ணுலகமும் மனிதகுலமும் ஒன்று’ என்ற சீன கோட்பாட்டுடனும் ஒத்துப்போகிறது.
இந்தியாவின் ஆன்மீக மற்றும் உடற்பயிற்சி முறையான யோகா, சீனாவின் அக்குபஞ்சர் மற்றும் தற்காப்புக் கலைகளுடன் இணைந்து, ‘டிராகன் மற்றும் யானையின் நடனம்’ (சீனா-இந்தியா கூட்டணி) போன்றவை இரு நாடுகள் இடையேயான நாகரிக இணைப்பை வெளிப்படுத்துகின்றன. இவ்வாறு அவர் கூறினார்.
மூச்சுப் பயிற்சி…
இந்நிழச்சியில் சாட்டர்ஜி பேசும்போது, ‘‘சுவாசம் என்பது மனித வாழ்க்கையின் ஒரு முக்கிய அங்கமாகும், மேலும் மூச்சுப்பயிற்சி நுட்பங்கள் சிறந்த வாழ்க்கைக்கு உதவுகின்றன. நமது வாழ்க்கையின் ஒவ்வொரு நொடியும் ஒரு மூச்சுடன் தான் நகர்கிறது. பிறக்கும் போது நமது முதல் மூச்சை இழுக்கிறோம், இந்த உலகை விட்டு பிரியும்போது நமது இறுதி மூச்சை விடுகிறோம். அந்த இரு தருணங்களுக்கும் இடையில் தான் நமது வாழ்க்கையின் முழு கதையும் விரிவடைகிறது” என்றார்.
