சீனாவின் பல துறைகளிலும் இந்தியர்கள் கனிசமாக பணியாற்றுகின்றனர். இவர்கள் சந்திக்கும் பிரச்சினைகள் குறித்து கருத்து கேட்க, தலைநகர் பெய்ஜிங்கில் உள்ள இந்திய தூதரகம் சார்பில் முதல் முறையாக ‘திறந்த வெளி’ ஆலோசனைக் கூட்டம் நேற்று முன்தினம் நடைபெற்றது.
இதில் இந்தியத் தூதர் விக்ரம் துரைசாமி, ஆலோசகர்கள் நிதின் ஜீத் சிங் மற்றும் ரமேஷ் சிங் ஆகியோர் கலந்து கொண்டு இந்தியர்களிடம் கருத்து கேட்டனர். இதில் பங்கேற்ற இந்தியர்கள் கூறியதாவது: சீன சமூக ஊடகத் தளங்களில் இந்தியர்களின் உணவுப் பழக்கவழக்கங்கள் மற்றும் கலாச்சாரம் குறித்த கருத்துகள் உட்பட, இந்தியர்களுக்கு எதிராக அவதூறுகள் பரப்பப்படுவது அதிகரித்துள்ளது.
மேலும், சீனாவால் இந்திய வல்லுநர்களுக்கு வழங்கப்படும் வேலை விசாக்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. வாழ்க்கைத் துணையாக வருபவர்கள் சீனாவில் வேலை செய்வதில் உள்ள கட்டுப்பாடுகள் அதிகரித்துள்ளன. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர். இதற்கு பதில் அளித்த இந்திய தூதர் விக்ரம் துரைசாமி கூறியதாவது: இருதரப்பு உறவுகளை மேம்படுத்தும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
சீன சமூக ஊடகங்களில் இந்தியர்கள் பற்றி அவதூறு பரப்பப்படுவது அதிகரித்துள்ளது குறித்து சீன அரசும் கவலையடைந்துள்ளது. அதைத் தடுக்க சீன அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்திய தூதரகம் தனது சமூக ஊடகப் பக்கங்களின் மூலம் உண்மைத் தகவல்களைப் பகிர்ந்து தவறானத் தகவல்களை எதிர்த்து வருகிறது. வசந்த மேளா போன்ற வருடாந்திர நிகழ்ச்சிகளுக்குக் கிடைத்த பெரும் வரவேற்பைத் தொடர்ந்து, இந்தியாவின் பன்முகக் கலாச்சாரம் மற்றும் உணவுகளைக் காட்சிப்படுத்த மேலும் பல கலாச்சார நிகழ்ச்சிகளை நடத்தத் தூதரகம் திட்டமிட்டுள்ளது.
அதோடு, வேலை தொடர்பான பிரச்சினைகளை எதிர்கொள்ளும் இந்தியர்களுக்கு உதவ, சட்ட வல்லுநர்களுடன் இணைந்து ஒரு அமைப்பை உருவாக்க தூதரகம் பணியாற்றி வருகிறது.
தூதரகச் சேவைகளை மேம்படுத்தவும் இந்தியர்களின் கவலைகளைத் தீர்க்கவும் ‘திறந்தவெளி’ கூட்டங்களை அடிக்கடி நடத்தத் தூதரகம் திட்டமிட்டுள்ளது. இந்தியாவிற்கான பயணத்தை எளிதாக்கும் வகையில், அடுத்த வாரம் முதல் இந்திய விசாவுக்கு விண்ணப்பிக்கும் சீனக் குடிமக்களுக்கான ஆவண நடைமுறைகளைத் தூதரகம் மேலும் எளிதாக்கும். இவ்வாறு விக்ரம் துரைசாமி கூறினார்.
