ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கெதிரான போட்டியில் எங்களது பந்துவீச்சு உத்தி சரியாக செயல்படவில்லை என்று பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டன் ஸ்ரேயஸ் ஐயர் தெரிவித்தார்.
நியூ சண்டிகர் மைதானத்தில் நேற்று முன் தினம் இரவு நடைபெற்ற ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணியை வீழ்த்தியது. இந்த ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணி பெற்ற முதல் தோல்வியாகும் இது.
இந்த தோல்வி குறித்து பஞ்சாப் அணி கேப்டன் ஸ்ரேயஸ் ஐயர் கூறியதாவது: இந்தப் போட்டியில் நாங்கள் முதலில் பேட்டிங் செய்து ரன்களைக் குவித்தோம். ஸ்கோர் போர்டில் 222 ரன்களைப் பார்த்தபோது இது நல்ல ஸ்கோர் என்றே நினைத்தேன்.
ஆனால், நாங்கள் பந்துவீச்சில் தோல்வி அடைந்துவிட்டோம். ராஜஸ்தான் அணி வீரர்கள் மிக சிறப்பாக விளையாடினார்கள். குறிப்பாக ஷுபம் துபேவும், டோனவன் பெரைராவும் மிகவும் அபாரமாக விளையாடி பார்ட்னர் ஷிப் அமைத்தனர். இன்றைய நாள் எங்களுக்கு சாதகமாக அமையவில்லை. இவ்வாறு ஸ்ரேயஸ் ஐயர் தெரிவித்தார்.
