எச்1பி விசாவில் 1 லட்சம் டாலர் கட்டணம் யார் யாருக்கு? – அமெரிக்கா விளக்கம்

0
22

அமெரிக்காவில் வெளிநாட்டினர் பணிபுரிவதற்கு பெற வேண்டிய எச்1 பி விசா கட்டணம் குறித்து அமெரிக்க குடியுரிமை மற்றும் குடிவரவு சேவைகள் (USCIS) அமைப்பு வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பின்படி, 2025 செப்டம்பர்-21 க்கு பிறகு புதிதாக எச்1 பி விசா கோரி விண்ணப்பிப்பவர்கள்தான் ஒரு லட்சம் டாலர் செலுத்த வேண்டும். ஏற்கெனவே, எச்1 பி விசா மறுக்கப்பட்டோர், மீண்டும் விண்ணப்பித்தால் அவர்களும் ஒரு லட்சம் டாலர் செலுத்த வேண்டும்.

அதே நேரத்தில், இந்த அறிவிப்பு வெளியாகும் முன்னர் வழங்கப்பட்ட மற்றும் தற்போது செல்லுபடியாகும் எச்1 பி விசாக்களுக்கும், செப்டம்பர் 21 நள்ளிரவு 12:01 மணிக்கு முன்னர் விசா கோரி விண்ணப்பித்தவர்களும் ஒரு லட்சம் டாலர் செலுத்த வேண்டாம் என விளக்கம் அளித்துள்ளது. மேலும், தற்போது எச்1 பி வைத்திருப்பவர்கள் அமெரிக்காவுக்கு உள்ளேயும் வெளியேயும் பயணிப்பதை இந்த அறிவிப்பு தடுக்கவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னணி என்ன? – அமெரிக்காவில் தற்காலிகமாக பணியாற்றுவோருக்கு எச்1பி விசா வழங்கப்படுகிறது. ஆய்வாளர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள் உள்ளிட்ட சிறப்பு பணித் திறன்கொண்டவர்களுக்கு மட்டுமே இந்த விசா வழங்கப்படும். ஓராண்டில் 65 ஆயிரம் எச்1பி விசாக்களை அமெரிக்க அரசு விநியோகம் செய்கிறது. மேலும், அமெரிக்க உயர் கல்வி நிறுவனங்களில் படித்த வெளிநாட்டு மாணவர்களுக்கு 20,000 எச்1பி விசா வழங்கப்படுகிறது. இதன்படி, ஓராண்டில் மொத்தம் 85,000 எச்1பி விசாக்கள் வழங்கப்படுகின்றன.

எச்1பி விசா பெற்றவர்கள் அமெரிக்காவில் 3 ஆண்டுகள் வரை தங்கியிருந்து பணியாற்றலாம். தேவைப்பட்டால், மேலும் 3 ஆண்டுகள் வரை விசா காலத்தை நீட்டிக்க முடியும். சமீபத்திய புள்ளிவிவரங்களின்படி, அமெரிக்காவில் எச்1பி விசாவில் சுமார் ஏழரை லட்சம் பேர் பணியாற்றி வருகின்றனர். அவர்களது மனைவி, பிள்ளைகள் என சுமார் ஆறு லட்சம் பேர் அமெரிக்காவில் வசிக்கின்றனர். ஒட்டுமொத்தமாக எச்1பி விசா அடிப்படையில் அமெரிக்கா முழுவதும் 13 லட்சத்துக்கும் மேற்பட்ட வெளிநாட்டினர் தங்கி உள்ளனர். இந்த விசாவை பெற்றவர்களில் சுமார் 71 சதவீதம் பேர் இந்தியர்கள்.

இந்நிலையில்தான், ஒரு லட்சத்து 32 ஆயிரம் ரூபாயாக இருந்த எச்1பி விசா கட்டணத்தை 88 லட்சம் ரூபாயாக உயர்த்த வகை செய்யும் ஆணையில் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் கையெழுத்திட்டுள்ளார். இந்தப் புதிய கட்டண நடைமுறை உடனடியாக நடைமுறைக்கு வந்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here