வட தமிழக கரையை ஒட்டி நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவிழந்துவிட்டது. இதன் காரணமாக தமிழகத்தில் இன்று முதல் 6 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக் கடலில் தெற்கு ஆந்திரா மற்றும் வடதமிழக கடலோரப் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, அதே பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுகுறைந்தது. பின்னர் அந்த காற்றழுத்த தாழ்வு பகுதி முற்றிலும் வலுவிழந்தது.
இதன் காரணமாக தமிழகத்தில் இன்று ஒருசில இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 28, 29, 30 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகாலை வேளையில் ஒருசில இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும். டிச.31 மற்றும் ஜன.1 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நேற்று காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவுகளின்படி அதிகபட்சமாக சென்னை வில்லிவாக்கத்தில் 4 செமீ, ஏசிஎஸ் மருத்துவக் கல்லூரி, தண்டையார்பேட்டை, அம்பத்தூர், அயனாவரம், சென்னை ஆட்சியர் அலுவலகம், திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லி ஆகிய இடங்களில் தலா 3 செமீ மழை பதிவாகியுள்ளது. இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.